Thursday, August 31, 2017

இன்னுமொரு இன அழிப்பு...? - எஸ்.செந்தில், ரகுராம்

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவழிப்புக் கொடுமை பற்றிய இக்கட்டுரை 2012 ஆகஸ்டில் புதுவிசை 36வது இதழில் வெளியானது.
           
மியன்மாரின் (பர்மாவின்) வடமேற்கிலுள்ள அரகான் பகுதியில் வாழும் சிறுபான்மை இனமான ரோஹிங்ய (Rohingya) முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் கலவரங்களும் ஜூன் 2012 முதல் தீவிரமடைந்துள்ளன. ரமலான் நோன்பைக்கூட அமைதியாக மேற் கொள்ள முடியாதபடி அவர்கள் மீதான தாக்குதல்கள் இப்போதும் நீடிக்கின்றன. இந்தக்கலவரங்களை உள்ளூர் புத்தபிக்குகளும் அப்பகுதியின் பெரும்பான்மையினரான ரக்கயன் இனத்தைச் சேர்ந்த வகுப்புவாதிகளும் வழிநடத்துகின்றனர். பர்மிய பாதுகாப்புப்படையினரும் இக்கலவரங்களின் கூட்டாளிகளாக இருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை  தெரிவிக்கின்றது. கொலை, வல்லாங்கு, முஸ்லிம்களை விரட்டியடிப்பது என இந்த பாதுகாப்புப்படையின் இனவெறிச் செயல்கள் அமைந்துள்ளன. இந்தியா இந்துக்களுக்கே எனக் கூறப்படுவது போலவே பர்மா புத்த பர்மி யர்களுக்கே எனும் வாதம் இந்தக்கலவரத்தின் பின்னணியாக உள்ளது. 

இதுவரை 80,000க்கும் அதிகமான ரோஹிங்ய முஸ்லிம்கள் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து அகதிகளாக பங்களாதேஷிற்கு புகலிடம் தேடிச்சென்றுள்ளனர்.  பங்களாதேஷிற்கு போய்ச் சேர்ந்தாலும் சரி, அல்லது போகும் வழியில் கடந்தாகவேண்டிய நஃப் ஆற்றில் மூழ்கிச் செத்தாலும் சரி பர்மாவிலிருந்து இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்கிற பதைப்பே இவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா (Sheikh Hasina)  அல்ஜஸிர (aljazeera) ஆங்கில பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க இயலாது எனக் கூறியுள்ளார். மியன்மரின் அதிபரான தீன் சென் (Thein Sein) முஸ்லிம் சிறுபான்மையினரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் (1948 சுதந்திரத்திற்கு முன்னால்) குடியேறிய ரோஹிங்ய மக்களுக்கு மட்டுமே பர்மிய அரசு பொறுப்பேற்க முடியுமென்றும் அதன் பிறகு வந்தேறியவர்களுக்கு பொறுப்பேற்க இயலாது எனவும் இவர் 2012 ஜுன் மாதத்தில் தெரிவித்துள்ளார். எட்டாம் நூற்றாண்டிலிருந்தே பர்மாவில் ரோஹிங்ய முஸ்லிம்களும் வாழ்ந்துவரும் நிலையில் அவரது இந்த அறிவிப்பு வரலாற்றைத் திரிப்பதாகும். (இந்த தீன் சென்னைத்தான்  பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக உலகநாடுகள் வெகுவாகப் பாராட்டுகின்றன. இதேவகையான பாராட்டு நரேந்திர மோடிக்கும் கிடைத்திருப்பது தற்செயலானதல்ல)

புத்தபிக்குகளின் இக்கலவரத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உலக ஊடகங்களும் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் கண்டுங்காணாது இருக்கின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நவிபிள்ளை விடுத்த ஒன்றிரண்டு அறிக்கைகளைத் தாண்டி செயல்பூர்வமாக எதுவும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. புத்தபிக்கு களை அமைதிவழிக்கு திரும்பும்படி அறிவுரை கூறி இவ்வினப்படுகொலையைத் தடுக்குமாறு தர்மத்தின் குரலென சிலரால் விதந்தோதப்படுகிற தலாய் லாமாவிடம் உலக முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்தன, எனினும் அதனால் எந்தப்பலனும் இல்லை. ஜனநாயகம் மற்றும் சமாதானத்தின் தூதுவராக முன்னிறுத்தப்படும் ஆங் சான் சூகீ, ஒரு பேட்டியில் ரோஹிங்ய மக்கள் பர்மியர்களா என்றுகூடத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை  இம்மக்கள் பர்மாவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் தானே தவிர பர்மிய குடிமக்கள் அல்லர். ஒருவேளை அவர்கள் பர்மியர்கள் என்றால் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது மிகவும் விஷமத்தனமானது.

காக்சான் பகுதியில் ஐ.நா. சபை நடத்தும் அகதி முகாமில் 30,000க்கு  மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான பரிதாபம் பங்களாதேஷில் இருக்கின்றபோதும் ஏற்கனவே ஏழ்மையும் மக்கள்தொகை நெருக்கடி மிகுந்த இடமாகவும் அது இருப்பதால் இதுவரை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு தனது நாட்டின் கதவுகளைத் திறக்க மறுக்கிறது. ஒரு வேளை பங்களாதேஷ் கதவைத் திறந்துவிடுமானால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புத்தமத வெறியர்கள் பர்மாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் அடித்து பங்களாதேஷிற்கு விரட்டிவிடுவார்கள் என அது அஞ்சுகிறது. 1992முதல் காக்சான் பகுதியில் அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிற எல்லையில்லா மருத்துவர் குழு, ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான தடையை பங்களாதேஷ் உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. தடை நீடிக்குமானால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் உயிர் காக்கும் மருத்துவ உதவியின்றி மடிய நேரிடும் எனவும் கூறியுள்ளது.

புதுடெல்லியிலுள்ள மியன்மார் தூதரகத்திற்கு எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒரு சிறு போராட்டத்தை நடத்தியுள்ளன. உலகில் தொடர்ந்து அதிகமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மைச்சமூகங்களில் ஒன்றாக ரோஹிங்ய முஸ்லிம்கள் இருக்கின்றனர் என அப்போது இவர்கள் கூறியிருக்கின்றனர். 

இந்தியாவின் கடைசி முகலாய அரசான  இரண்டாம் பகதுர்ஷா மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டு 1862ல் அங்கேயே சிறையில் இறந்தும் போனார். இந்தி யாவிலிருந்து சென்ற முஸ்லிம்களில் அதிகமானோர் ரங்கூனில் வாழ்கின்றனர். இவர்களும் இதர பர்மிய முஸ்லிம்களும் சேர்ந்து பர்மிய மக்கள்தொகையில்  4%.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான இனக்கலவரங்கள் வெடித்துள்ளன. இந்தியர்களையும் முஸ்லிம்களையும் வந்தேறிகளாக கருதி வெறுக்கும் போக்கு இருந்துவந்துள்ளது. 1938லேயே பர்மா பர்மியர்களுக்கே எனும் கோஷத்துடன் முஸ்லிம் பஜார் பகுதியில் ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த வன்முறை போராட்டத்தை முறியடிக்க அன்றைய இந்திய காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் மூன்று புத்தபிக்குகள் காயமடைந்தனர். இந்தப் படங்களை பர்மிய செய்தித்தாள்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரம் பர்மா முழுக்க வெடித்தது. முஸ்லிம்களின் உடைமைகளும், வீடுகளும், 113 மசூதிகளும் சூறையாடப்பட்டன. இதைத் தொடர்ந்து 1938 செப் 28ல் பிரிட்டிஷ் கவர்னர் அமைத்த ஒரு விசாரணைக்கமிசன்,  பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளே இக்கலவரத்திற்கு காரணம் எனக் கூறி யது. எல்லா சிறுபான்மையினருக்கும் முழுக்குடியுரிமை வழங்கவேண்டும் என்று இதற்குப்பின் வந்த சைமன் கமிசன் கூறியது. சுதந்திரமான வழிபாட்டுரிமை, சொத்து ரிமை, பொது வருவாயிலிருந்து பள்ளிகளை நடத்தக் கூடிய உரிமை, இந்தியாவிலிருந்து தனிநாடாக பர்மிய சுயாட்சி ஆகியவை இருக்கவேண்டுமெனவும் சைமன் குழு பரிந்துரைத்தது.

1948ஆம் ஆண்டு சுதந்திர பர்மாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற யு-நு (yu-nu), 1956ல் புத்த மதத்தை பர்மிய அரசின் மதமாக அறிவித்தார். மதச்சார்பற்ற, எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவான ஒரு தேசம் என்கிற பர்மிய அரசியல் சாசன வரையறுப்புக்கு விரோதமான இவ்வறிவிப்பு  சிறுபான்மையினரை கோபம் கொள்ளச் செய்தது. 1962ல் முஸ்லிம்களின் நிலை மேலும் மோசமடைந்தது. அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பது போன்ற வாதங்கள் வலுப்பெற்றன. கருப்பர் (கலா) என்று பர்மிய முஸ்லிம்களை இனத்துவேஷத்துடன் குறிக்கும் போக்கும் வலுப்பெற்றது. 1997ம் ஆண்டு ஒரு முஸ்லிம் ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டி 1000 புத்தபிக்குகள் மசூதிகளையும், கடைகளையும், வாகனங்களையும் சூறையாடினர். இதையொட்டி மாண்டலேவில் மூன்றுபேர் இறந்தனர், 100 புத்தபிக்குகள் கைது செய்யப்பட்டனர்.

2001ம் ஆண்டு சிட்வே (sittwe) பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும் புத்தமதத்தவர்க்கும் இடையே மோதல் நிலை உருவானது. இளந்துறவிகள் 7 பேர் கேக் தின்றுவிட்டு முஸ்லிம் கடைக்காரருக்கு காசு கொடுக்கவில்லை என்றும், கடைக்காரரான முஸ்லிம் பெண்மணி ஒரு துறவியை அடித்துவிட்டார் என்றும் இதைத் தொடர்ந்து மற்ற புத்தத்துறவிகள் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறி பெரும் கலவரம் வெடித்தது. புத்தத் துறவிகள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். 2001ம் ஆண்டு "நம் இனம் அழிந்து காணாமல் போகும்" என்பது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் புத்தபிக்குகளால் விரிவாக விநியோகிக்கப்பட்டன. 2001 கலவரத்தின் போது கலவரக்காரர்கள் செல்போன் வைத்திருந்ததாகவும், எனவே அரசுத்தலையீடு இல்லாமல் இது சாத்தியமில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் பாமியன் பகுதியில் புத்தர் சிலை உடைப்பு நடந்ததையொட்டி பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை மேலும் மோசமாகியது. பாமியானில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக டாங்கு (toungoo) பகுதியிலுள்ள ஹந்த (Hantha) மசூதி இடிக்கப்படவேண்டுமென புத்தபிக்குகள் சொல்லத் துவங்கினர். இவர்கள் தலைமையில் 11 மசூதிகள்  இடிக்கப்பட்டன, 400 முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப் பட்டன, 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். டாங்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2001 மே 18,  ஹந்த மசூதியும் டாங்கு ரயில்நிலைய மசூதியும் இடிக்கப்பட்டன. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ரோஹிங்ய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு ஐ.நா. அகதி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென அதிபர் தீன் சென் 2012 ஜூனில் கூறியதைத் தொடர்ந்து தற்போது ரக்கயன் பகுதிகளில் இன்னொரு இனப்படுகொலை துவங்கியுள்ளது. 

பல்வேறு பர்மிய அரசியல் அமைப்புகளுக்குள் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பகைமை தலை தூக்கியுள்ளது. இந்த பாசிஸ்ட் கலவரம் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. முஸ்லிம் தரப்பு ஏதாவதொரு சிறு தவறு செய்யும்வரை காத்திருந்து அத்தவறைப் பயன்படுத்தி அந்தப்பகுதியிலுள்ள முஸ்லிம்களை விரட்டியடிக்கும் தந்திரம் கையாளப்படுகிறது. ரக்கயன் (Rakhine) புத்தபிக்குகளே இக்கலவரத்தைத் துவக்கியதாக ரோஹிங்கிய முஸ்லிம்களும், ரோஹிங்கிய முஸ்லிம்களே இதற்கு காரணம் என ரக்கயன்களும் மாறிமாறி குற்றம்சாட்டுகிறார்கள். பர்மிய உளவுத்துறையின் பல ஏஜெண்டுகள் புத்தபிக்குகளாக உள்ளனர் என்றும் இவர்களே இக்கலவரத்திற்கு தலைமையேற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் புத்தபிக்குகளுக்கும், வன்முறையை விரும்பாத புத்தபிக்குகளுக்கும் இடையே ஒரு பிளவு உள்ளதாகவும் தெரிகிறது. 

மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போதைய கலவரம் பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை 30.07.2012 அன்று வெளியிட்டுள்ளது.  ஐ.நா.சபைக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, 2012 மே 28 அன்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை  வன்புணர்ச்சி செய்ததாகவும் அதற்கு பதிலடியாக 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், அதையொட்டி புத்தமதத்தை பின்பற்றுபவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் மூண்டதாகவும், இதில் இருதரப்பினரும்  சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் அல்ல என்றும், இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 77 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் போலியானவை என்றும், கலவரத்தில் அரசின் ஈடுபாடு உள்ளது எனும் வாதம் பொய்  என்றும்  கூறப்பட்டுள்ளது.

எந்தக் கொலையாளியும் உண்மையை ஒப்புக்கொள்வதில்லைதானே? சேனல் 4 வீடியோக்காட்சிகள் போலியானவை என்று ராஜபக்ஷே கும்பல் வாதாடவில்லையா? பெண்போலிசை மானபங்கத்திலிருந்து காப்பாற்றவே தாமிரபரணியிலும் பரமக்குடியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியதாகிவிட்டது என்று தமிழ்நாட்டு போலிஸ் தலித்துகள் மீது பழிபோடவில்லையா? பர்மா அரசும் அப்படித்தான், முஸ்லிம்களை காமுகர்களாக சித்தரித்துக் காட்டி தனது இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் இனஅழிப்புக் கலவரங்களையும் கொலைகளையும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

சர்வதேச சமூகத்தின் முன்னே வைக்கப்படும் மேற்சொன்ன அறிக்கையில், மியான்மர் பன்முக கலாச் சாரமும் வேறுபட்ட வழிபாட்டு முறைகளும் பல்வேறு மதநம்பிக்கைகளும் கொண்ட இனங்கள் ஒன்றுபட்டு வாழும் நாடு என்று பீற்றிக்கொண்டாலும் ரோஹியாங் முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கிடும் அரசின் இழி முயற்சி ஓயவில்லை.

பத்திரிகையாளர்களுக்கு கலவரப்பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும், எல்லா தகவல் தொடர்பாளர்களுக்கான வழியும் அடைக்கப்பட்டுள்ளதாலும் நிலைமையை உறுதி செய்துகொள்ள இயலாத நிலை இருக்கிறது. இதைப்பற்றி  அல்ஜஸிர (aljazeera), அரபு நியூஸ் (Arabnews),, ரடியாண்ட்ஸ்விக்கி (Radiantswiki)  போன்ற பத்திரிகைகளின் இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளும் செய்திகளும் நம் காலத்திலேயே நமக்கு மிக அருகாக இன்னொரு இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது என்ற திகிலூட்டும் உண்மையைத் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்ற கார்ப்பரேட் ஊடகங்கள் கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் தானே என்று பாராமுகமாகவே இருக்கின்றன. நாமும் மௌனம் மட்டுமே காப்போமானால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர்க்குற்றத்திற்கும் இனவழிப்புக்கும்  துணைபோவதன்றி வேறல்ல என்பதை இலங்கையின் வரலாறு நமக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment