Sunday, August 27, 2017

நேர்காணல் : அருந்ததி ராய் எழுத்து, போராட்டம் மற்றும் சீருடல் பயிற்சி...?

எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் அறியப்படும் அருந்ததிராய் அவர்களின் மனம்திறந்த பேட்டி எல் (ELLE)  என்ற ஃபேஷன் இதழில் வெளிவந்திருக்கிறது. காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் மூலம் உலகப்புகழ் பெற்றிருந்த அருந்ததிராய், ஃப்ராஸ்ட் கவிதையின் 'குறைவான பேர் பயணித்த சாலையை' விரும்பி தேர்ந்தெடுத்தார். மாவோயிஸ்ட்களுடனும், பழங் குடி மக்களுடன் காடுகளில் நடந்தார். ஒரு வழக்கமான இலக்கியவாதியின் தந்திரத்தைக் கொள்ளாமல் அரசை விமர்சித்தார். அவருடைய தீவிரமான நிலைப்பாடுகளும், காத்திரமான விமர்சனங்களும் அரசை நிலைகுலையச் செய்தன. வழக்குகள், கைது, மிரட்டல், தாக்குதல், அவதூறு என்று சோதனைக்குள்ளானார். அதேநேரத்தில் இவை தவிர்க்கவியலாமல் இந்திய இடதுசாரி தரப்பின் முக்கிய ஆளுமையாக அவரை உயர்த்தியது. அருந்ததி ராயின் தனித்துவமான தனிவாழ்வு பேரவா ஏற்படுத்தும் ஒன்று. இப்பேட்டியின் பெரும்பகுதி அதைச் சுற்றியே சுழல்கிறது. தனதுதாய், சகோதரர், கணவர், குழந்தைகள், தோழிகள், பிடித்த எழுத்தாளர்கள், புதிய நாவல், விரும்பும் உடைகள், உடற்பயிற்சியக அனுபவங்கள் குறித்த தகவல்களை உற்சாகமாகப் பகிர்ந்திருக்கிறார். என்ன பேச நினைத்தாலும் அது அரசியலாகவே திமிறுகிறது. இந்த வித்தியாசமான பேட்டியை எல் இதழ் சார்பாக ஐஸ்வர்யா சுப்ரமணியம்  எடுத்திருக்கிறார்.  தமிழில்: ராஜ்தேவ்

***
எல் இதழின் அட்டைப்படத்தில் நீங்கள் எப்படி?

அது நரையின் செருக்கு! எல்லின் அட்டையில் பெண்கள் வருவதற்கான நேரம் வாய்த்திருக்கிறது. கண்ணாடி செருப்புகளை அணிந்துகொண்டு மிடுக்காக சுற்றிவரும் சின்ட்ரல்லாவின் தீய மூத்த சகோதரிகள் வெளிச்சத்துக்கு வரும்நேரம்வந்துவிட்டது. ஏன் குறிப்பாக எல்? ஏனெனில் கருப்புநிற பெண்களை யெல்லின் அட்டைப் படங்களில் பார்த்துள்ளேன். நான் அதை விரும்பினேன். நான் ஒரு கருப்புநிற பெண். நம்மில் பலரும் அந்த நிறம் தான். தொண்ணூறு சதவீதம் கருப்பு நிறமே. வெள்ளை நிறம் மீதும், நேர்முடி மீதும் இந்தியர்களுக்கு இருக்கும் பற்று என்னை வாட்டும் ஒன்று. நமக்கு ஒரு புதிய அழகியல் தேவைப்படுகிறது. எல் அதற்கு முயற்சிப்பதை பார்க்கிறேன். அது விந்தையானது. நான் அந்த நோக்கத்தை உயர்த்திப் பிடிக்க இங்கு வந்துள்ளேன்.

இது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனால், மற்றவர்கள் உங்களை எப்படி பார்ப்பார்கள், உங்கள் நம்பகத் தன்மை போன்றவற்றை மோசமாக மதிப்பிடமாட்டார்களா?

ஓ! எனது நம்பகத்தன்மை முதலியவை. ஆமாம் ஆமாம். ஆனால் நான் விமர்சனங்களை எதிர்கொள்ள துணிந்து விட்டேன். அச்சுறுத்தக்கூடிய, நரைத்த தலைமுடி உடைய வயதான பெண்மணிக்குள், பரவசம் நிறைந்த கறுத்த தலைமயிர் கொண்ட 22 வயதின் வேட்கை ஒன்று வெளிவரத் துடிப்பதை நான் இந்த உலகுக்கு தெரியப்படுத்த விழைகிறேன்.

எனக்கு தெரிந்ததுதான் அது. ஸ்நோடெனுடன் உங்கள் சந்திப்பை முன்வைத்து ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’(Things That Can And Cannot Be Said)  என்ற தலைப்பில் இப்போது ஒரு புத்தகம் உங்களிடமிருந்து அடுத்தமாதம் (ஜூலையில்)  வெளிவர இருக்கிறதே.

அது ஒரு சிறிய புத்தகம். ஜான் கசாக்குடன் இணைந்து எழுதியது. ஸ்நோடெனை ரஷ்யா சென்று சந்திக்கும் ஆலோசனையை ஜான் கசாக்தான் வழங்கினார். பல வகைகளில் ஸ்நோடென் தனித்துவமானவர். முழுமை யான வாக்கியங்களுடன் மிகவும் தொடர்ச்சியாக பேசக் கூடிய சிலரை மட்டுமே பார்த்துள்ளேன். ஒரு புஷ் ஆதரவாளராக வலதுசாரி முகாமிலிருந்து, இராக் போருக்கு ஆதரவாக கையெழுத்தும் இட்டிருந்த அவர் இன்று வந்திருக்கும் இடம்- திகைக்க வைக்கும் ஒரு பயணம். நாங்கள் இரண்டு நாட்களை முழுமையாக அவருடன் கழித்தோம். ஜான் கசாக், டேனியல் எல்ஸ்பெர்க் மற்றும் நான். பென்டெகன் தொடர்பான தகவல்களை கசிய செய்து டேனியல் 60களின் ஸ்நோடென் என்று பெயர் பெற்றவர். அது ஒரு வசீகரிக்கும், நெகிழ்ச்சியான உரையாடல்.

ஏதாவது பதிவு செய்ய முடிந்ததா?

ஸ்நோடென் எங்களை பதிவு செய்ய அனுமதித்தார். பின்னர் அவற்றை எழுத்துப்பூர்வமாக வடித்து, தொகுத்து அனுப்பியபோது அதனை அவர் பதிப்பிக்க விரும்ப வில்லை. பரிகாசம் மற்றும் கேலிமிகுந்து இருந்தது கூட காரணமாக இருக்கலாம். அவருடைய நிலை மிகவும் கடினமானது. எனவே அவர் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அதுவல்ல அந்த உரையாடலின் தன்மை. அது கொஞ்சமும் மதிப்பு பெறவில்லை. ஆனால், துர திருஷ்டவசமாக, ‘சொல்லக்கூடியவையும், சொல்லக் கூடாதவையும்’ நூல் ஸ்நோடெனின் நேர்ச்சொல்லாக எதையும் கொண்டிருக்கவில்லை. அது மிகவும் சங்கடமானது. இணையம், கண்காணிப்பு மற்றும் அதை நடை முறைப்படுத்தும் முறை போன்று அவர் நன்கறிந்த வற்றை சொல்லும் போது நம்மை வாய்பிளக்கச் செய்யும் அளவுக்கு அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார். கேலி மற்றும் நையாண்டிக்கு அப்பால் அந்த நூல் தேசியம், ஏகாதிபத்தியம், போர், முதலாளித்துவம், கார்ப்பரேட் உதவி மற்றும் கம்யூனிசத்தின் தோல்வி போன்ற தீவிர மான பிரச்சினைகள் பற்றிய எண்ண அலைகள் எனலாம். நூலின் இறுதிப்பாகம் மிகவும் அதிர்ச்சிகரமானது. அணு ஆயுதப்போட்டியில் அமெரிக்க அரசு ஈடுபடுவது பொய் தகவல்களின் அடிப்படையில் என்றார் எல்ஸ்பெர்க்.

நீங்கள் ஒழுங்குமுறையை கடைபிடிக்கும் ஓர் எழுத்தாளரா?

நான் கொஞ்சம் ஒழுங்குமுறையை கடைபிடிப்பேன். இப்போது மிகக்கடுமையாகக் கடைபிடிக்கிறேன். ஏனெனில் ஒரு புதிய புத்தகத்தை எழுதிவருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் எனது மேசையில் எழுதி வருகிறேன். சிலநேரங்களில், நாள்போவதே தெரியாமல் இருந்திருக்கிறேன். திடீரென சுற்றிப் பார்க்கும்போது இருண்டிருக்கும். கணினித்திரையில் இருந்து மட்டுமே வெளிச்சம் வந்துகொண்டிருக்கும். கடந்தவாரம் வேக வைக்க நினைத்த முட்டையை இரும்புச்சட்டியில் கருகவிட்டு விட்டேன். சமையலறையில் புகை சூழ்ந்தது. இந்த வாரம் மறுபடியும் முட்டை கருகிவிடுமோ என்று பயந்துபோய் ஓடிச்சென்று தீயை அணைத்தபோது தான் தெரிந்தது இரும்புச்சட்டியில் முட்டை இல்லை என்று. கொஞ்சம் பைத்தியம் பிடித்தது போன்றுதான்.

புதிய நாவல்! நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம். எப்போது வெளிவருகிறது?

அடுத்த வருடம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். 

சின்ன விசயங்களின் கடவுள் வெளியாகி இருபது வருடங் கள் கழித்து புதிய நாவல் வெளிவருகிறது. எதிர்பார்ப்புக்குரியதாக என்ன இருக்கிறது?

என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது சின்ன விசயங்களின் கடவுள் II.

ஏன் இப்போது எழுதத் தீர்மானித்தீர்கள்?

நான் முடிவு செய்யவில்லை, அது முடிவு செய்துகொண்டது. சிலவருடங்களாகவே அதனை சுற்றி நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன். புனைவு என்று வரும்போது நான் அவசரப்படுவதில்லை. கடந்த 20 வருடங்களாக நான் அதிகமான பயணத்தையும், எழுத்தையும் மேற்கொண்டி ருக்கிறேன். அவை ஒரு பாறையாக என்னுள் படிந்துள்ளதை உணர்கிறேன். உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புரிதல்கள் பல அடுக்குகளாக படிந்துள்ளன. அவற்றை புனைவாக அல்லாமல் வேறு எப்படியும் கூறிட இயலாது. நீங்கள் அங்கே அமரவேண்டும். பல அடுக்குகள் கொண்ட அந்த அனுபவம் அவிழ்ந்து உங்கள் மரபுப் பொருளின் ஒரு பகுதியாக மாறவேண்டும். பின்னர் அது உரைநடையாக வியர்த்து வெளியேற வேண்டும்.

உங்கள் புனைவு சுயவரலாற்றுத்தன்மை கொண்டதா?

சுயவரலாறு என்று எதை சொல்கிறீர்கள்? எது எதார்த்த வகைப்பட்டதாகும்? நீங்கள் கற்பனை செய்துகொள்ளும் ஒன்று சுயவரலாறு ஆகுமா? உங்கள் கற்பனையில் நீங்கள் அனுபவத்த ஒன்று? உங்கள் கற்பனையில் இன் னொருவரின் வலியையோ, மகிழ்ச்சியையோ உணர்வது சுய வரலாறா? எனக்கு தெரியவில்லை. அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவம் பற்றி பெரும் விவாதம் நடந்தி ருக்கும் நிலையில் இது மிகப்பெரிய கேள்வியாகவும், ஒரு புனைவெழுத்தாளருக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

நீங்கள் எழுதும் முறை என்ன?

நான் அதைப்பற்றி பேசமுயன்றால், என்னுடைய பேச்சு சிறிது தொடர்பற்றதாகிவிடுகிறது. ஏனெனில், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று என்னால் முழு மையாக உணரமுடியவில்லை. என்னுடைய கதையாடல் கட்டவிழ்கின்ற முறை எனக்கு மிக முக்கியமானது. இதோ என்னிடம் ஒரு வசீகரக் கதை இருக்கிறது. நான் அதை சொல்லப்போகிறேன் என்பதை போன்றல்ல. நான் அதுபோன்று எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, என்னால் அதை ஒரு கோட்பாட்டுக்குள் கொண்டுவர இயலாது. நான் அதை புரிந்துகொள்ளவும், விளக்கவும் சிரமப்படுவேன். நான் உட்கார்ந்து எழுதுவது மிக முக்கியம் என்று சொல்வேன். மேலும் அது புத்தகமாக எப்போதுமே  அங்கு இருக்கி றது என்று சொல்வேன். உங்களுக்கு தெரியுமா? உங்கள் மண்டைக்குள் இசை ஓடுவதைப் போன்று. ஏதாவது ஒருவகையில் அதுபற்றி சிந்திக்காத ஒரு பொழுதில்லை. அது அங்கு இல்லாத ஒரு நொடிப்பொழுதும் இல்லை. அது ஒருவகையான ஆட்கொள்ளல் என நினைக்கிறேன்.

இது ஒருவகை ஆட்கொள்ளல் போலுள்ளதே.

நீங்கள் ஒரு கதையை உடமையாக்குவதல்ல; உங்களை ஒரு கதை உடமையாக்குவதை உணரவேண்டும். பின்னர் அது எப்படி சொல்லப்பட வேண்டுமென்று அது சொல்ல நீங்கள் காத்திருக்கவேண்டும். அது என்னுடைய அனைத்து அறிதிறன்களுடனும் உறவாடும். நான் அதை தடுக்காமல் நன்றியுடன் இருப்பேன். அது மிக அழகா னது. அது நீங்கள் ஏதோ அற்புதமான ஒன்றை செய்கி றீர்கள் என்று பொருளில்லை. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், ஏதோவொன்று வாழ்க்கையில் உங்களை முழுமையாக ஆட்கொள்ளும். அது ஒரு கொடை. இந்த உலகில் புனைவு எழுதுவதை போன்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், ஆட்கொள்ளும், வருத்தும் ஒன்று வேறெதுவும் இல்லை. ஆனால், பெரும்பாலான நேரம் நான் உணர்வது என்னவென்றால், என்னுடைய பணி என்பது கவனம் குவித்து புத்தகம் தன்னை எழுத விடுவதுதான்.

கட்டுரைகள் பற்றி?

எனது கட்டுரைகள் ஒரு அவசரத்தன்மையுடனும், சிறிது கோபத்துடனும் எழுதப்படுபவை. ஒவ்வொரு முறை அரசியல் கட்டுரை எழுதும்போதும், இன்னொரு கட்டுரை நான் எழுதமாட்டேன் என்று நான் சொல்லிக் கொள்வேன்.

பிறகு இன்னொன்றை எழுதிவிடுவீர்கள்.

ஆம். அது எப்படியென்றால், வேறொருவர் அதைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். உங்களுக்கு தெரியுமா? ஆனாலும் நான் எழுதுவதற்கு காரணம், என்னால் அதைக் கட்டுப்படுத்த இயலாததை உணர்வதால்தான். நான் அதை எழுதத் துவங்கிவிட்டால், நாளொன்றிற்கு 20 மணிநேரம் வெறித்தனமான ஈடுபாட்டுடன் எழுதுவேன்.

நீங்கள் 17 வயதில் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளீர்கள். அம்மாவுடன் ஏதும் பிரச்சினையா?

என்னால் வீட்டில் வாழமுடியவில்லை. அது பெரும் மனவேதனையாக அப்போதிருந்தது. ஆனால், வீட்டை விட்டு வெளியேறியதை பல வழிகளில் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எனது தாய்தான் எனது ஆக்கச்சக்தியும், அழிப்புச்சக்தியுமாக இருந்தார். அவர் முன்னிலையில் நான் நொறுக்கப்பட்ட ஒரு ஈரல். அவர் ஓர் அழகான பள்ளியைத் துவக்கினார். அதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வந் தார். பல தலைமுறைகளாக இது நடந்துகொண்டிருக்கி றது. அவர் அவராக இருப்பதை மெச்சுகிறேன். அதே நேரத்தில் அந்த உணர்ச்சியில் நான் கருகிப் போய்விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இரு அணுஆயுதச் சக்திகள். மிக அருகாமை யில் நாங்கள் நீண்டநாட்களுக்கு இருக்க முடியாது.

இப்போது அவருடன் உங்களுக்கு ஒட்டுறவு இருக்கிறதா?

நாங்கள் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதனை மதித்து நடக்கிறோம். ஆனால், ஒரு போர் ஏற்பட்டுவிட்டால், நான் தெளிவாகவும், ஐயத்துக்கு இடமின்றியும் சொல்லிவிடுகிறேன்- எனது தாய் தான் வெற்றி பெறவேண்டும். நான் அவரை தோற்கடிக்க விரும்பவில்லை.

இது ஒரு விசேடமான உறவாக தெரிகிறதே.

உண்மைதான். ஆனால் எந்தக் கோணத்திலிருந்து பார்த் தாலும் அது அழகற்ற ஒன்று. இப்படி சொல்லலாம். நேர் திசை என்றாலும், எதிர்திசை என்றாலும் அல்லது, வாய்ப்புள்ள எந்த வழியாக இருந்தாலும் நான் இருப்ப தன் மையம் அம்மாதான். அவள் விசேடமான பெண். மணி. பெண்களுக்கு இருக்கும் எந்த தாய்மைக்குணமும் அவருக்கு இருந்ததில்லை. ஒருவேளை தாய்மைக்குணம் இல்லாதது தான் நான் வியக்க காரணமா என்றும் தெரிய வில்லை. அல்லது சிலநேரங்களில் ‘கொஞ்சம் விநோதம் குறைவாக இருக்கக்கூடாதா?' என்று நினைத்துக்கொள் வேன். ஆனால், இல்லை, இல்லை. அது உண்மை இல்லை.

வேறு என்ன வகையான பண்புநலன்கள்?

ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து ‘நான் வெளியே சென்றிருந்தபோது, என்னை அருந்ததி ராயின் அம்மாவா என்று கேட்டார்கள். கன்னத்தில் அறைந்தது போன்று உணர்ந்தேன்!' என்றார். எனது பாதி மனநிலை சிரித்துக்கொண்டது. மீதி பாதி, ‘அப்படி கேட்டது என்ன ரொம்ப தப்பா?' என்று சொல்லிக்கொண்டது.

ஆ! அம்மாக்கள்.

அம்மா நீண்டகாலமாகவே உடல்நிலை சரியில்லாதவர். கடும் ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டவர். ஆஸ்துமா  உள்ளவர்களின் இயக்கத்தை மூச்சுதான் கட்டுப்படுத்தும். அதுபோல தான் என்னையும் அவரது மூச்சு கட்டுப்படுத் தியது. அம்மா இறந்துவிடுவாரோ என்ற அச்சத்துடனே வளர்ந்தேன். ஒவ்வொரு மூச்சிலும் அவர் அனுபவிக்கும் வலியையும், மீட்சியையும் கண்ணுற்றேன். பலநாட்கள் அம்மாவுடன் மருத்துவமனையில் எனது நேரம் கழிந் தது. சிலமாதங்களுக்கு முன்னர் அவர் நோய்வாய்ப்பட் டார். காற்றூட்டக் கருவி பொருத்தும் அளவுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இப்போது மீண்டெழுந்து மறுபடியும் தனது வேலைகளில் மும்முரமாக உள்ளார். அவர் ஆட்சிப்பகுதி மறுபடியும் அவர் கைகளுக்கு வந்துள்ளது. அடிப்படையில் அவர் ஒரு ஹூடினி- தப்பிக்கும் கலைஞர். எனது அம்மாவைப் பற்றி சொல்ல ஒரு புத்தகம் தேவைப்படும். என்னால் மட்டுமே எழுத முடியும். அது வேறெவராலும் முடியாது.

நான் அதை படிக்க விரும்புகிறேன். உங்களை பாதித்த வேறு பெண்கள் யார்?

என் அம்மா என் அப்பாவை விட்டு பிரிந்தபோது அசாமி லிருந்து ஊட்டிக்கு வந்தார். அப்போது பணமில்லாம லும் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். எழுந்திருக்க இயலா மல் படுக்கையிலே சும்மா படுத்துக் கிடப்பார். வீட்டில் நான் மற்றும் சகோதரருடன் மூன்று அல்லது நான்கு பேர் உண்டு. எங்களை கடைவீதிக்கு ஒரு கூடையுடனும் ஒரு குறிப்புடனும் அனுப்புவார். அந்த குறிப்பை படித்து விட்டு கடைக்காரர்கள் பொருள்கள் மற்றும் காய்கறி களை கூடையில் போடுவார்கள். அதன் பிறகு குருசம் மாள் என்ற பெண் எங்களுடன் இணைந்தார். அவர் எங் களை கவனித்துக்கொண்டார். அவர் எங்கிருந்து வந்தார் என்று எனக்குத் தெரியாது. அதன்பிறகு நான்கு வருட காலம் அம்மாவுடனே அவர் இருந்தார். சமீபத்தில் அவரை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் கட்டிப் பிடித்து கூக்குரலிட்டோம். ஒரு தாயின் ‘வழக்கமான' அனைத்து பணிவிடைகளையும் எனக்குச் செய்தவர். நான் அவரை காதலித்தேன். சில நாட்களுக்கு முன்பு மரணித்தார். 96 வயது. அவரைப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் சகோதரருடன் நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தீர்களா?

ஆம். நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள். அவர் கொச்சியில் வாழ்கிறார். கடலுணவு சார்ந்த தொழில் அவருடையது. இறால் தரகர் அவர். எனக்கு இறால் பிடிக்காது. ஒத்துக்காது.

தன்னிறைவு அமைதி கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்பவர் நீங்கள், இல்லையா? அது தனிமையுணர்ச்சியை கொண்டு வராதா?

தனித்து வாழும் மிக அற்புதமான மற்றும் விசித்திரமான ஒரு சமூகத்தின் பகுதியானவள் நான். தனிமையுணர்ச்சி என்று அதனை புரிந்துகொள்ளக்கூடாது. எனக்கு ஆழ மான மற்றும் நீடித்த நட்புகள் உள்ளன. இந்த பூமியின் கடைசி முனைவரை ஒருவர் மற்றவருக்காக இணைந்து நடக்கத் தயாராக இருப்பவர்கள். எனவே ஆம், நான் தனியே வாழ்பவள். ஆனால் என் வாழ்வு முழுமையான அன்பால் நிறைந்து இருப்பது. எனது முன்னாள் கணவர் பிரதீப் மற்றும் தங்கள் தாயை மிகச்சிறுவயதிலே இழந்த எனது குழந்தைகள் மித்வா மற்றும் பையா ஆகியோரு டனான உறவு விந்தையானது. நான் தனியே வாழ்வதன் காரணம் மற்றவர்களின் மீது எனது தனிப்போக்குகளை சுமத்தக்கூடாது என்பதற்காகத்தான். மட்டுமின்றி, நான் எழுதுவதால் ஏற்படும் விளைவுகளை - அவ்வப்போது அவை மிக மோசமானவை- மற்றவர்கள் அனுபவிப்ப திலும் எனக்கு விருப்பமில்லை. நான் தனியே வாழ விரும்பவில்லை என்றால், நான் வாழமாட்டேன். எந்த குறையும் இல்லாததாக... 

குறை இல்லாததாக...? அந்த வாக்கியத்தை முடியுங்கள்.

ஓ, ஹா! ஹா! 

ஏன் போராடுகிறீர்கள்?

நாம் இப்படி சொல்வோம். அதிகாரத்தின் பக்கவாட்டில் எளிதாக சாய்பவர்கள் மற்றும் அதனுடன் இயல்பான பகைமை பாராட்டும் மக்கள். இந்த இருபிரிவினரின் மோதல்தான் உலகின் சமநிலையைக் குலைக்கிறது என்று கருதுகிறேன். இந்த கோட்டின் அடிப்படையிலே என்னை நான் நிறுத்துகிறேன். நமது சுதந்திரங்களை உருவாக்க நீண்ட மற்றும் குறிப்பிடத்தக்க பல போர் களை நிறைய பேர் இட்டுள்ளனர். நாம் அந்த வெளி களை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம்? ஏதாவ தொரு இயற்கை சக்தி நமக்கு இந்த சுதந்திரங்களை கொடையளித்ததாக கருதுவது சரியா? இல்லை. அவை ஒவ்வொன்றாக அடையப் பெற்றவை. சில உணர்ச்சியற்ற இளம்பெண்கள் ‘நான் ஒரு பெண்ணியவாதியல்ல' என்று சொல்வதை கேட்கும்போது மிகவும் எரிச்சலுறுகிறேன்.

என்னை சொல்ல வைக்காதீர்கள்.

நான் சொல்வது, என்ன போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அவர்கள் அறிவார்களா? இன்று நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு சுதந்திரமும் பெண்ணியவாதிகள் பல ரால் கிடைத்தவை. இன்றைய நமது நிலைக்காக பெண் கள் பலர் பெருவிலையை கொடுத்திருக்கிறார்கள். நமது பிறவித்திறத்தாலும், திறமையாலும் அவை வரவில்லை. பெண்களின் வாக்குரிமை சம்பந்தப்பட்ட எளிய விசயத்தையே எடுத்துக்கொள்வோம், யார் அதற்கு போராடினார்கள்? பெண் வாக்குரிமைப் போராளிகள் அல்லவா. பெரும் போராட்டமின்றி எந்த சுதந்திரமும் நமக்கு கிடைக்கவில்லை. நீங்கள் பெண்ணியவாதி இல்லையென்றால், திரைச்சீலைக்குள் மறுபடியும் புகுங்கள். அடுக்களைக்குள் சென்று கட்டளைகளை பெறுங்கள். அதை செய்ய நீங்கள் விரும்பவில்லை அல்லவா? அப்படியெனில், பெண்ணியவாதிகளுக்கு நன்றி சொல்லுங்கள்.

மேலும் சுதந்திரங்கள் நிலையற்றவை.

இந்தியாவில் எழும் பெண்விடுதலை வியக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இந்தப் புரட்சிக்கு இணையாக பழமைவாதத்தின் இருளும் உள்ளோட்டத் தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் பெண் களை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வளர்ந்துகொண்டி ருந்தபோது மருத்துவர்களாகவும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களாகவும் இருந்தார்கள். விரும்பிய உடை அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந் தார்கள். இப்போது? நமது ஆபத்துகள் பற்றிய எச்ச ரிக்கை உணர்வு அவசியம். கணநேரத்தில் பல நூற்றாண் டுகளுக்கு பின்னால் நாம் கொண்டு செல்லப்படலாம்.

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் இயல்பான உணர்வெழுச்சி கொண்ட ஒரு எழுத்தா ளர். என்னுடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங் களை எனது பித்தப்பை வேடிக்கை உருவாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்று கருதுவேன்.

ஆங். உங்கள் அபுனைவு எழுத்து பற்றி?

என்னுடைய அபுனைவு எழுத்துக்கு வருகின்ற அறிவார்ந்த விமர்சனத்தை சலித்தறிவது எளிதான செயல் இல்லை. பெரும்பாலனவை இணையத்தில் பரவுகின்ற உடனடி முட்டாள்தனங்களும்  வெறிக்கூச்சல்களும் ஆனவை. ஆனால் எனக்கு வேண்டியது கிடைத்துவிடும். அடிக்கடி மக்கள் சொல்வார்கள், ‘அருந்ததிராய் ஒரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர்' என்று. வாதங்களுக்கு முகம் கொடுக்க மறுக்கும் தன்மை கொண்டது அது. ‘அருந்ததி ராய் சர்ச்சைக்குரியனவற்றை எழுதுகிறார்' என்பது சரி யான கூற்றாக இருக்கலாம். சர்ச்சை அங்கிருக்கிறது. அணைகள் நல்லதா? அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டுமா? பஸ்தர் முழுவதையும் கார்ப்பரேட்களுக்கு கையளிக்க வேண்டுமா? நான் அவை குறித்து எழுதுகி றேன். அவற்றைச் சீர்தூக்கி மதிப்பிடுகிறேன். பின்னர் ஒரு நிலைப்பாடு எடுக்கிறேன். ஆனால், சர்ச்சைகளை நான் உருவாக்குவதில்லை என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

உங்கள் நூல்களுக்கு வரும் விமர்சனங்களில் ஏதும்  பொருட்படுத்தத் தகுந்ததை பார்த்துள்ளீர்களா?

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று எப்போதுமே நான் இருந்ததில்லை இருக்கவும் முடியாது. இவை விவாதிக்கப்படவேண்டும். அது சரி அல்லது தவறு என் பதாக அல்ல. எனக்கு வருகின்ற விமர்சனத்துக்கு என்னு டைய நூல்கள் பரிணமித்தமுறை சில வழிகளில் உகந்த எதிர்வினையாக இருக்கலாம். ஆனால், எனது பார்வை களை மாற்றிக்கொள்ள நான் உடன்பட்டதில்லை.

நீங்கள் சொல்வதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமா?

நாம் இன்றொரு காலனியாக அல்லாமல் சுதந்திர நாடாக கருதப்படுகிறோம். ஆனால், அம்பேத்கர் 1936ல் சொன் னதை நம்மால் இன்று சொல்லமுடியுமா? ‘இந்துமதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பேரச்சம் ஏற்படுத்தும் அகன்ற அறை' என்று அவர் அன்று சொன்னதை போன்று இன்று நாம் சொல்லமுடியுமா? அதைச் சொன்னால் என்ன நடக்கும் நமக்கு? நாம் இன்று மிக ஆபத்தான இடத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். நாம் இன்று மிக கவனத்துடனும், முன் ஆலோசனையுடனும் பேசவேண் டியது முக்கியம் என்று கருதுகிறேன். அதேநேரத்தில், நாம் பின் வாங்கக் கூடாது என்பது மிக முக்கியம். நமது எண்ணங்களை நாம் கண்டிப்பாக பேசவேண்டும். இப்போது நேரம் வாய்த்திருக்கிறது. இல்லையெனில், மிகவும் தாமதித்துவிடுவோம்.

ஒரு நாள் சிறைவாசம் எப்படி இருந்தது?

ஞாபகார்த்தமானது அது. என்னுடைய சாகச  உணர்வை யும் கடந்து என் பின்னால் கதவுகள் மூடப்பட்ட போது நடுக்கமூட்டியது. ஒரு குற்றவாளியாக உள்ளே சென் றேன். தோழர்களுடன் இணைந்து சிறைநிரப்பும் போராட்டமல்ல அது. சுதந்திரமும், சிறைவாசமும் இரண்டு தனித்த பிரபஞ்சங்கள். ஒருநாள் சிறை என்பது பெரிய விசயமல்ல. தாங்கள் செய்யாத குற்றத்துக்கு ஆயிரக்கணக்கான பேர் தற்போது சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் ஏழைகள், தலித்கள், முஸ்லிம்கள் மற்றும் மிக முக்கியமாக ஆதிவாசிகள். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக போரை ஏவியிருக்கும் நாடு நம்முடையது.

நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? நான் ஒரு கை பார்ப்பதுண்டு.

நான் மாட்டிறைச்சி, பன்றிக்கறி ஆகியவற்றை உண்பேன். நமது நாட்டில் இப்போது தலையெடுக்கும் உணவு பாசிஸம் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

தினமும் உடற்பயிற்சிக்கூடம் செல்வீர்களா?

ஆம். தினமும் செல்வேன்.
ஒவ்வொரு நாளும்?

ஒவ்வொரு நாளும் தான்.

பாருங்கள். இது எனக்கு ஒரு அன்னிய கருத்தாக்கமாக படுகிறது.

நன்று. ஒரு பழக்க அடிமையின் மரபுக்கூறுகள் உள்ளவள் நான். என்னுடைய தந்தை ஒரு குடிகாரர், தெரியுமா. ஒரு விஸ்கி குப்பியை அவருடையை கல்லறையின் மேல் வைத்துவிட்டு கவனியுங்கள். நல்லூழாக அவரு டைய பழக்க அடிமைத்தனத்தின் மரபணு என்னுள் தங்கிக்கொண்டது.

உடற்பயிற்சி சம்பந்தமாக நீங்கள் எப்பவுமே இப்படித்தானா?

எனது குழந்தைப்பருவம் தொந்தரவான ஒன்றாக இருந்ததே தவிர துயரார்ந்ததாக இல்லை. நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஓடிக்கொண்ட சமாளித்தேன். வீட்டைச் சுற்றி, பள்ளி மைதானத்தைச் சுற்றி... நான் சமீபத்தில் என்னுடைய பழைய உடற்பயிற்சி ஆசிரியர் திரு.செல்வபாக்கியத்தை சந்தித்தேன். அவர் பையன் களுக்கு மட்டும்தான் பயிற்சி கொடுப்பார். ஆனால், நான் அவருடனே எப்போதும் திரிந்ததால் எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார். நானொன்றும் நட்சத்திர விளை யாட்டு வீரர் இல்லை. உடற்பயிற்சியகத்துக்கு நான் என்னை வருத்தச் செல்வதில்லை. தம்மை வருத்தும் எண்ணம் கொண்டு ஒப்படைக்கும் நபர்களை நான் ஐயுறுகிறேன். நான் ஒரு முழுமையான சந்தோசத்துக்காக செல்கிறேன்.

நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை.

இங்கே பாருங்கள், நாங்கள் பழைய வட்டம் ஒன்றின் நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள். அங்கு அவ்வள விற்கு அன்பு உண்டு. என்னுடைய நாள் ஒன்றின் உச்ச நிலை அது. என்னை நிதானமிழக்காமல் தொடரச்செய் வது. காதல், நட்பு, சிரிப்பு மற்றும் வியர்வை நிறைந்த இடம்.

நீங்கள் ஒரு சீருடல் பயிற்சியாளராக இருந்தீர்கள், இல்லையா?

ஆம். மனமுடைந்திருந்த நாட்களில் நான் சீருடல் பயிற்சி யாளராக இருந்தேன். நானும் சுஷ்மா என்ற அழகான பெண்மணியும் பயிற்சியாளர்களாக இருந்தோம். அவர் பளுதூக்கும் வீராங்கனை. அற்புதமான, கட்டுறுதி கொண்டவர். உடற்பயிற்சி உடையில் அங்குள்ள பெண்களைப் பார்க்க இந்த லாலாஜிக்கள் வருவதுண்டு. நாங்கள் அவர்களை சீண்டுவோம். ஒருமுறை ஒருவர் மிகவும் தளர்ச்சியுற்று வீழ்ந்தார். வகுப்பின் கடைசியில் படுத்துக்கிடந்தார். நான் நடுக்கமுற்றேன். அவர் இறந்து விட்டதாகவே கருதினேன். இது அடுத்த நாளின் பத்திரிகையில் எப்படியான செய்திப்பதிவாக இருக்கும் என்பது எனது மனக்கண்ணில் ஓடியது.

ட்விட்டரில் இருக்க வேண்டியவர் நீங்கள். ஏனில்லை?

ஏனெனில் நான் என்னை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உள்ள அனைத்தையும் ஒரு நாவலாக திறக்க முயற்சிக்கிறேன். நான் ஒரு ரகசியமாக இருக்க விரும்புகி றேன். ட்விட்டரில் என்னால் என்னை சிதறடித்துக் கொள்ள முடியாது.

சரி நாம் ஃபேஜன் குறித்து பேசுவோம். நீங்கள் பெரோ மற்றும் ஈகா உடைகளை அதிகம் அணிவீர்கள் அல்லவா?

நான் அவற்றை வெறும் முத்திரையாக கருதுவதில்லை. சின்ன விசயங்களின் கடவுளை என்னிலிருந்து வேறாக கருதாதது போன்று எனக்கு அவை. நான் அவற்றை அனீத் (அரோரா) மற்றும் ரீனா (சிங்)- ஆகவே கருதுகிறேன். அவர்கள் எனது நண்பர்கள். அனீத்தின் உழைப்பை பல்லாண்டுகளாக அறிவேன். பெரோ என்றழைப்பதற்கு முன்பிருந்தே அவரை தெரியும். என்னால் அந்த உடை களை வாங்கும் வசதி வந்த உடனே அவற்றை வாங்கி விட்டேன். அவற்றில் சில 15  வருடங்கள் பழையவை. அவற்றை நான் தொடர்ந்து அணிந்துவருகிறேன். என்னு டைய சிறந்த உடைகளைத் தயாரித்தவர்கள் அனீத்தும், ரீனாவுமே. அவர்கள் இருவரும் நவீனப் பெண்களாக நம்மை மாற்றும் புதிய அழகியலை வடிவமைக்க முயற்சிப்பதாக எண்ணுகிறேன்.
அது அழகாக சொல்வதாக இருக்கிறது.

அது மிக முக்கியமானது. நவீனத்துவத்தை தனித்த பாரம் பரியமிக்க துணியிலும், பாணியிலும் எப்படி கொண்டு வருவீர்கள்? சிறிய கருப்பு உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்பவர்கள் அல்ல நாம் (எனக்கு அப்படி செல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றா லும்). புடவை அணிவதை நான் விரும்புகிறேன் என்றா லும் புடவையையும், சுடிதாரையும் எப்போதும் அணிவதும் விரும்பக்கூடியது அல்ல. எனவே எப்படி நாம் உடை உடுத்துவது? நாம் என்ன அணியவேண்டும்? உடைகள், நான் அணியும் முறையில் அவை கேளிக்கை யாக இருக்கின்றன. மிகுதியான மகிழ்ச்சியை வழங்கு கின்றன. மேலும் அரசியலும் அதிலுள்ளது.

அரசியல் எங்ஙனம்?

நான் கட்டிடக்கலை பயின்று கொண்டிருந்தபோது இந்த கேள்விதான் - மரபு மற்றும் நவீனத்துவத்துக்கு இடையே யான விளையாட்டு- எனது மனதில் எப்போதும் இருந்தது. 

ஒரு நேர்மையான நவீனத்துவ கட்டிடக்கலை இந்த உல கில் எப்படி இருக்கவேண்டும்? என்னுடைய இளமைக் காலங்களில் எனக்கு வேண்டியதெல்லாம் மரபின் பிடியி லிருந்தும் அது எனக்கு வைத்து இருந்ததிலிருந்தும் தப்பிப்பதாக இருந்தது. அதன்பிறகு பிரியமான நவீனத்து வத்தின் விகாரமான பேருருவுக்கு எதிராக வந்தீர்கள். பிறகு அதனிலிருந்தும் திரும்பி பறந்துவிட்டீர்கள். எனவே நான் என்ன அணிகிறேனோ, அது இந்த மாற்றத் தின் கதையை கூறும் என்று கருதுகிறேன். ஒயில் மிக முக்கியமானது. யாரும் இல்லையென்று சொல்ல முடி யாது. ஆம், இது சற்று இனிமையான மிகை. அதை பெறுவது நன்றிக்குரியது. நல்லூழாக நகைநட்டுகள் மீது எனக்கு ஆர்வமில்லை... எனது மொத்த ஆடை அலமாரி யும் ஒரு ஜோடி வைரத்தோடுகளுக்கு இணையாகாது. எனது ஆடைகள் அழகான அனுபவத்தை தருவன. சில இன்ப நுகர்வுகளுக்கு கண்டிப்பான தேவை என் வாழ்வில் இருக்கிறது.

கையில் மிக நீண்டகாலத்துக்கு பணம் ஏதுமில்லாமல், இறுதியில் பணம் வந்து சேர்ந்தது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்ததா?

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உண்மைதான். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள எனது மனதிற்கு நீண்டகாலம் ஆனது. நான் அது குறித்து தீவிர குற்றஉணர்ச்சி அடைந்தேன் . மேலும் மனம் சிக்கலானது.

ஆனால் ஏன்? நீங்கள் சம்பாதித்ததுதானே.

ஆம். ஆனால் அதற்கொரு எல்லை உண்டு. எனக்கு அந்த சிறிய, சந்தோச, வெற்றிகர மற்றும் உவகை உணர்ச்சிகள் இருந்ததில்லை. உங்களுக்குத் தெரியுமா, நான் இன்று உலக அழகி. நான் என்னுடைய தாய் மற்றும் முகவர் மற்றும் இயேசுநாதருக்கு நன்றி சொல்லவிரும்புகிறேன். நீண்டகாலத்துக்கு அது மனப்புணர்ச்சியாக இருந்தது. நான் சிறிது சம்பாதிப்பது தேவையாக இருந்தது. ஆனால், எனக்கு கிடைத்தது... மிக அதிகம். அது நான் கொஞ்சம் கூட கற்பனை செய்துகொள்ளாதது, தெரியுமா? அந்தளவுக்கு புகழ். அந்தளவுக்கு பணம். அதாவது எனது தரத்தின் மூலம் பெற்றது. ஒரு ரூபாய் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போனவருக்கு கிடைத்தவை அவை.

நீங்கள் சிறந்த நாவல் ஒன்றை எழுதினீர்கள்.

புக்கர் விருது கிடைத்தபோது நான் கிளர்ச்சியுற்றேன். ஆம், அதுதான் உண்மை. ஆனால், இந்த விருது எனக்கு கிடைத்த நாளின் இரவில் நான் விநோதமான கனவு ஒன்றை கண்டேன். மெலிந்த, மரகதக் கை ஒன்று நான் நீந்திக்கொண்டிருந்த நீரில் என்னை நோக்கி வந்தது. நான் ஒரு மீனாக இன்னொரு மீனுடன் நீந்திக்கொண்டிருந் தேன். பின்னர் அந்தகை என்னை நீரிலிருந்து தூக்கி வெளி யேற்றியது. பின்னர் ஒரு குரல், ‘நான் உனக்கு எதையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன். என்ன வேண்டும் உனக்கு?' என்று கேட்டது. நான் சொன்னேன், ‘என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப வை' என்று. எனது வாழ்க்கை மாறிவிடும்... வெடித்துவிடும் என்று திகிலடைந்தேன். அது நடந்தது. என்னிடமுள்ள தீவிர மான அரசியல் நபர் வெளியே வரவேண்டியிருந்தது. அவள் ஒளிந்துகொள்ள வேறிடமில்லை. எனது சொந்த வாழ்க்கையில் பெருவிலை அதற்காகக் கொடுக்க வேண் டியிருக்கும். அது நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதை எப்படி கையாள்வது மற்றும் என்ன செய்துகொள்வது என்பதை கற்றுக்கொண்டேன். எனவே இப்போது எனக்கு அது அதிர்ச்சியில்லை. ஆனால், நான் ஒத்துக்கொள்கிறேன்- முன்பிருந்தேன் என்று.

மேலும் அந்த புகழ்? விமான நிலையங்களில் நீங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்ட அனுபவம் உண்டா?

ஆம், அது எப்பவுமே மரியாதைக்குரிய தன்மையில் நடைபெறுவதுண்டு. ஆனால், அது சோர்வடையச் செய்கிறது. நான் அதுகுறித்து எந்த புகாரையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், செல்ஃபீ மோகம் பெருகியி ருக்கும் இந்த நாட்களில் உங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள எல்லோருக்கும் ஒரு உரிமை இருக்கிறது. இது வொரு தொற்றுநோய். நான் மிகவும் பயந்த நேரங்களும் உண்டு. இந்த ஜெ.என்.யூ விசயம் நடந்து கொண்டிருந்த போது, சத்தமிடும் ஊடக நெறியாளர்கள் தொலைக்காட்சிகளில் என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். அது ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.

நீங்கள் தேசவிரோதியா?

நான் தேசவிரோதிகள் பட்டியலின் அ-பிரிவில் இருப்பவள்.

உங்களுக்கு மதநம்பிக்கை உண்டா?

இல்லை. சாதாரணப் பொருளில் நான் மதநம்பிக்கை உள்ளவள் அல்ல. ஆனால், நான் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் விளக்கும் ஒரு தீவிர மார்க்சிஸ்டும் அல்ல. அதேநேரத்தில், சமூகத்தை ஆய்வு செய்யும் மிக முக்கியமான வழிமுறை அது என்பதை நான் நம்புகி றேன். ஆனால், அதுவே அனைத்துக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. ப்ரவுஸ்டை போன்று நான் அனைத்தின் சாத்தியத்திலும் நம்பிக்கை கொண்டவள். அனைத்துக் கும், உயிரற்ற பொருட்களிலும் ஆன்மா இருப்பதாக நம்புகிறேன். புனைவு எழுதுவது நான் பிரார்த்தனைக்கு மிக அருகாமையில் வருமிடம். என்னுடைய கவனத்தை ஒன்றின்மீது மிக தாராளமாக செலுத்தவும், ஒன்றிருக்கி றது என்ற நன்றியுணர்ச்சியுடன் இருப்பதும், என்னிடம் ஒன்றிருக்கிறது, நான் அதன் மீது முழு கவனத்தையும் கொடுத்து அதை ஆராதிப்பேன் என்பதும் ஒரு உயர்ந்த சக்தி ஒன்றின்மீது கொள்ளும் பிரார்த்தனை போன்றது.

மரணம் உங்களை அச்சுறுத்துவது உண்டா?

மரணம் அல்ல. ஆனால் நோய்களும், பலகீனங்களும் அச்சுறுத்துவதுண்டு. மருத்துவமனைகள், சுகவீனம் மற்றும் மற்றவர்களின் நோய்களுடனும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஒரு அசைந்தாடும் நாற் காலி இங்கிருக்கிறது. வீட்டின் உணர்ச்சிப்பூர்வ பொருள் இது. என்னுடைய மிகவும் இனியதோழி ஒருவர் கொடுத்தது. அவள் புற்றுநோயால் மாண்டாள். புற்று நோய் அவள் மூளையை அடைந்தபோது எங்கள் இருவ ருக்கும் முடிவு நெருங்கியது தெரிந்துவிட்டது. முடிவு எப்படி ஏற்படும் மற்றும் அதை எப்படி சிறந்தமுறையில் எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ள நான் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்றேன். இன்னும் சிலவாரங்களில் மூளை செயலிழந்துவிடும் என்று மருத் துவர் கூறினார். எனவே அடுத்தநாள் எனது வீட்டுக்கு கையில் இந்த அழகான நாற்காலியுடன் மதிய உணவுக்கு வந்தார். நான் அதை விரும்பியதை அவள் அறிவாள். அவள் சொன்னாள், 'இது உன்னுடையது. அது இங்கே இருக்கட்டும்' என்றார். மேலும் அவள், ‘இதில் நீ அமர்ந்து உன்னுடைய புதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை என்னுடைய மூளை செயல்படும் இப்போது படித்துக்காட்டவேண்டும். நான் எங்கு செல்கிறேனோ அந்த இடத்துக்கு உன்னுடைய நூலின் ஒரு துணுக்குடன் செல்ல விரும்புகிறேன்' என்றார். அவர் இறந்தார். மரணம் குறித்த எனது பயம் அதன் பிறகு குறைந்துவிட்டி ருந்தது. அவளால் அது முடியும் என்றால், என்னாலும்.. என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் நோய்வாய்ப் படுதல் கொடுமையானது.

எதைப் பற்றி நாமெல்லோரும் பயப்படவேண்டும்?

உள்நாட்டுப் போர்.1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஒரே நோக்கம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்பதுதான். அரசாங்கத்தின் திட்டங்களை வழிநடத்தும் அமைப்பாக இன்று அது தன்னை நிலைநிறுத்தியிருக்கி றது. பாகிஸ்தான் அதனை இசுலாமியக் குடியரசாக அறி வித்த பிறகு அதற்கு நேர்ந்ததைப் பாருங்கள். எது ‘உண்மையான இசுலாம்' எது உண்மையானதில்லை என்று முடிவு செய்ய பலரும் முயன்றதில் அந்தநாடு சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தானை விடவும் மிகவும் சிக்கலான, பன்முக நாடு. இந்து ராஷ்டி ரம் இங்கு ஏற்படவே முடியாது. நமது தொண்டைக் குழிக்குள் அவர்கள் தள்ளினால், நாம் நொறுங்கி விழுவோம்.

என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

ஸ்வெத்லனா அல்க்ஸிவிச் எழுதிய செர்னோபில் பிரார்த் தனை என்ற நூலைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ள புத்தகம். ஒரு அழகான உரைநடையை அளியுங்கள்;  உங்கள் பின்னே எங்கும் வரத் தயாராக இருக்கிறேன்.

பிடித்த இலக்கியவாதிகள்?

ஷேக்ஸ்பியர், கிப்ளிங், ரில்க்... பாடப்படக்கூடிய வாக்கி யங்களின் குருக்கள் இவர்கள். அழகான உரைநடையின் வசீகரத்துக்கு மயங்கும் வேசி நான். இசைக்கப்படும் உரைநடையாக இருக்கவேண்டும். ஷேக்ஸ்பியரின் எந்த வரியாக இருப்பினும் என்னை புல்லரிக்கச் செய்யும். அல்லது நபொகவ். மேலும் ஜான் பெர்கர். என்ன ஒரு வனப்பு!  ஜேம்ஸ் பால்ட்வின் மற்றும் டோனி மோரிசன்.

அனைவரும் அவசியமாக படிக்கவேண்டியது?

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோருடைய எழுத்துக்களை அனைவரும் படிக்கவேண்டும் என்று சொல்வேன். இந்தியச் சமூகத் தில் சாதி ஒரு புற்றுநோய் என்பேன். நாம் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றால், நமது சமூகம் தொடர்ந்து அழுகிய நிலையிலேதான் இருக்கும்.

கன்னையா குமார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் சொன்ன பலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது. அவர் வெளியே வந்தபிறகு வழங்கிய உரை என்னை மிகவும் ஈர்த்தது. அது உற்சாகமூட்டியது. பலரிடம் கவிந்திருந்த பயத்தின் புகைப்படலத்தைப் போக்கியது. அவருடைய உயிர்ப்பு பிடித்தது. எல்லோருமே என்னை பின் தொடர்ந்து நான் சொல்வதை திரும்ப சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அதுபோலவே நான் நம்புவ னவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவதில்லை. இதைத்தான் எதிர்ப்பின் பன்முகத் தன்மை என்கிறேன்.

இந்த உலகை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?

உங்களை எங்கே பொருத்திக்கொள்வது என்று முடிவெடுங்கள். யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

நம்பிக்கை எப்போதும் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். சில நேரங்களில் மகிழ்ச்சிதரும் அடுத்தவரியை எதிர்நோக்கி இருப்பேன். பெருங்காட்சிகள் இங்கே அரங்கேறுகின்றன- காலநிலைமாற்றம், அணுஆயுதப் போர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பின்னர் சிறுகாட்சிகள் வருகின்றன. பெரிய சித்திரத்தின் இருள் என்னை அடையத் துவங்கும் போது நான் கீழிறங்குவேன். ஒரு தவளையாக மாறி பாரவண்டிகள் செல்லும் நெடுஞ் சாலையில் குதித்து கடப்பேன். அதுவே சாத்தியமானது. வலப்பக்கம் பார், இடப்பக்கம் பார்... செல்! செல்! செல்! இன்னொரு நாள் போராட வாழு.

புதுவிசை 47


No comments:

Post a Comment