Friday, November 4, 2016

நேர்காணல்: மீரா நந்தா

                          
Science in Saffron (காவியில் அறிவியல்) என்கிற நூலை அண்மையில் வெளியிட்டுள்ள மீரா நந்தாவை  மதமும் அறிவி யலும் குறித்த ஆய்வாளரான ஸ்டீஃபனோ பிக்லியார்டி (Stefano Bigliardi) இத்தாலிய பகுத்தறிவு இதழான `லாய்டோ’வுக்காக (L’Ateo)   நேர்காணல் செய்தார். மீராவும் ஸ்டீஃபனோவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்நேர்காணலின் ஆங்கில  மொழியாக்கத்தை (Butterflies and Wheels (2016 Jan 29)  இதழ் வெளியிட்டிருந்தது. 


தமிழில்: கவின் மலர்
 ஸ்டீ: உங்கள் கல்வி மற்றும் தொழில் குறித்து எந்தெந்த விஷயங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்களை நான் நாத்திகவாதி என்பேன். அதை சற்றே விரித்து, உங்கள் நாத்திகத்தின் வேர்களையும் காரணங்களையும் குறித்துப் பேசலாமா?

மீரா: என் அறிவுசார்/தொழில்சார் பாதையும் என் “நம்பிக்கை” பாதையும் பின்னிப் பிணைந்தவை. ஒன்றோடொன்று தாக்கம் செலுத்துபவை.

மரபுக்கும் புதிய சிந்தனைகளுக்குமிடையே அல்லாடிய படியும், ஒரு பெண்ணாக என் சொந்தத்திறனின் மெல்லிய பிரதிபலிப்புக்கும் ஆணாதிக்கத்திற்குமிடையே ஊசலாடிய படியும் நான் வளர்ந்தேன். நாட்டின் விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய படியே என் தந்தை தன் இளமைக்காலத்தைக் கழித்தார். ஆழமான தேசியவாதத்திற்கும் தேசியவாத மனோநிலை தரும் ‘அவர்களா நாங்களா’ என்கிற குறுகிய எண்ணங்களுக்கெதிரான கலகத்துக்குமிடையில் சிக்கியிருந்தேன், இறுதியாக ஆனால் பெரும்பாலும், நம்பிக்கைக்கும் ஐயங்களுக்கும் இடையேயான போராட்டத்திலேதான் என் நாட்கள் கழிந்தன.

வட இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்து இந்த முரண்பாடுகளுடன்தான் வளர்ந்தேன். இந்தியாவின் திட்ட மிட்டு நிர்மாணிக்கப்பட்ட முதல் நகரம் அதுவே. தேசத்தின் புதிய பிறப்பின் அடையாளமாக அந்நகரம் நிர்மாணிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் கற்பனையிலும், பிரான்ஸின் புகழ்பெற்ற நகர் நிர்மாண நிபுணரான  லெ கார்புசியரின் வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டது சண்டிகர் நகரம். உள்கட்டமைப்பிலும் தோற்றத்திலும் நகரம் நவீனமாக உருவானது. ஆனால் அந்த இடத்திற்கும் மக்களுக்குமான இயல்பான தொடர்பே உருவாகவில்லை. என் பெற்றோர் உட்பட அங்கு வசித்த பலரும் நாட்டுப் பிரிவினையின் ரத்தக்களறியில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள்.

மரபான பழக்கவழக்கங்கள் மற்றும் இந்துமதக் கோட்பாடுகளிலும் அமிழ்ந்த ஒரு சூழலில் தான் வளர்ந்தேன். குடும்பத்தின் வழிபாட்டுத்தலங்களில், அருகிலுள்ள இந்து மற்றும் சீக்கியக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்குகொள்வதும், ராமாயண, பகவத் கீதை பாராயணங்களும் வாழ்வின் பகுதிகளாகிவிட்டன. என் கடவுளர்களை நான் மிகத் தீவிரமாக உள்வாங்கினேன். பிரார்த்தனைகளிலும், பிற சடங்குகளிலும் நான் முன்னால் நிற்பேன்.

சந்தேகத்தின் விதைகளை விதைத்து, அதன் விளைவாக முற்றிலுமாக மத நம்பிக்கைகளை இழக்கச் செய்தது நான் கற்ற அறிவியல் (நுண்ணுயிரியல்). மூலக்கூறு உயிரிய லும் (Molecular biology)  உயிர்வேதியியலும் (Biochemistry) எனக்கு அறிமுகமானது தான் திருப்புமுனையாக அமைந்தது. அதிலும் டிஎன்ஏ-வின் இரட்டை நூலேணி   வடிவம் குறித்து வாசிக்கும்போது என் மூளைக்குள் தீப்பற்றியது. வாழ்வின் அறியப்படாத ரகசிய கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் எனக்குத் தெரியுமென்று  நான் உணர்ந்தேன். புராணங்களின் கடவுள்கள் மற்றும் பெண் கடவுளர்களைவிட அவ்விடைகள் மிகுந்த நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தோன்றியது. அதிலிருந்து நான் வழிபடவே இல்லை.

அறிவியலில் மிகத் தீவிரமாகி, பிஎச்.டி ஆய்வு செய்ய முடிவெடுத்தேன். இந்தியாவின் மேல்தட்டு நிறுவனமான புதுதில்லி ஐஐடியில் பிஎச்.டி ஆய்வை முடித்தேன். ஆனால் ஆராய்ச்சியின் குறைவான தரம், அதிகாரமிக்க, ஏறத்தாழ நிலப்பிரபுத்துவமான முறையில் இயங்கும் பரிசோதனைச்சாலைகள், அவற்றுக்கும் வெளியுலகிற்கும் எத்தொடர்புமில்லாத தன்மை இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் (1983ல் நான் உயிரி தொழில் நுட்பத்தில் என் முதல் பிஎச்.டியை முடித்திருந்தேன்) உள்நாட்டில் வளர்ந்திருந்த காந்தியம் உட்பட பல் வேறு தத்துவங்களைக் கற்ற முக்கியமான அறிவுஜீவிகளாலும், writings of Critical Theory (Horkheimer and Adorno) மற்றும் அறிவியலின் புரட்சிகர தத்துவாதி பால் ஃப்யெராபெண்ட் உட்பட அறிவியலுக்கு எதிரான பலரின் மேற்குலக கருத்துக்களாலும் நவீன அறிவியல் கடும் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டவரான தாமஸ் குன் மற்றும் ‘அறுபதுகளின்’ பெண்ணிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு இலக்கியங்களும் இப்பட்டியலில் உண்டு. (ஐரோப்பிய மையத்துவம் மற்றும் இந்தியாவின் நவீனத்துவம் போன்றவற்றின் மீது பின்நவீனத்துவ மற்றும் பின்காலனிய விமர்சனங்கள் வரத்தொடங்கியிருந்த நேரம் அது).

நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்கிறேன். நான் அறிவியலில் மேற்கொண்டு தொடரப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். ஒரு பெரிய நாளிதழிலில் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்) அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை பிஎச்.டி முடித்தவுடன் கைவிட்டேன். பின் அமெரிக்காவிற்குச் சென்று முதலில் வரலாறும் பின் அறிவியலின் தத்துவமும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் (ப்ளூமிங்டன்) பயின்றேன். அதன்பிறகு நியூயார்க்கில் உள்ள ரென்ஸெலேர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்னொரு பிஎச்.டி முடித்தேன். 

என் இரண்டாவது கல்விப்புலப்பாதையை அறிவியலை ஆதரிப்பதற்காகவே அர்ப்பணித்தேன். அதுவே எனக்கு தனிப்பட்ட வகையில் விழிப்புணர்வையும் அறிவையும் வழங்கியது. இந்தியப் பண்பாட்டு வாழ்முறைகளில் புதிய ஞானத்தையும் மதச் சார்பின்மையையும் கொண்டுவரும் திட்டத்தில் தீவிரமாக வேண்டுமென தீர்மானித்தேன்.

என் பணிசார்ந்து நான் ஒரு வட்டப்பாதையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு ஐயங்கள் கொண்டு இயற்கைத்துவத்திற்கு ‘மாறிய’ அப் பயணத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறேன். அந்த மாற்றம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேச்சரங்கம் ஒன்றில்தான் நிகழ்ந்தது.

ஸ்டீ: பல வடிவங்களில் “மாற்றுச்சிந்தனைகளை” விதைக்கும் நாடு என்றே தோற்றம் தரப் படுவதும் கூறப்படுவதும், மேலும் “ஒருவரின் உண்மையான சுயத்தைக்” கண்டடைவதற்கு இந்தியாவில் வழியுள்ளதெனவும் உங்கள் தாய்நாட்டைப் பற்றி இத்தாலியில் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த வழக்கமான இந்தியாவின் பிம்பத்தைத் தாண்டியும் ஒரு சிலர் அறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக அதன் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் அதன் விளைவான சிக்கல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். இந்தியாவை மீரா நந்தாவின் சொற்களில் அறிந்து கொள்ளலாமா?

மீரா: இந்தியா பல முரண்பாடுகளின் நிலம். வெளியாட்களுக்கு தோற்றமளிப்பதைப் போல, ஆன்மிகத்தால் நிரம்பிய “மாற்றுச் சிந்தனை” மரபுகள் வழியாகவே ஒரு சாதாரண ஆணோ பெண்ணோ இந்தியாவைப் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இந்தியா, தான் தோற்றமளிப்பதைப்போல அத்தனை அன்பானதும் “ஆன்மிகமானது”மாக எப்போதும் இருப்பதில்லை.

சூழலை நான் எப்படி விவரிப்பேன்? உண்மை நிலவரங்களுக்காக ஒரு தேசிய நாளிதழின் தலையங்கத்தை துணைக்கழைக்கிறேன் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டிச 28, 2015)

  • ·ஷாம்லியில் ஓர் இளம்பெண் காணாமல் போகிறார். ஷாம்லி வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய நகரம். இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக அப்பெண் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கிறார் என இந்து மதத்தைச் சேர்ந்த மூத்தோர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கோயில் பூசாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து வலதுசாரி அரசியல் கட்சியான பாஜகவின் தலைவர்களும் அக்கூட்டத்தில் பேசுகின்றனர். ( சில நாட்கள் கழித்து, அந்தப் பெண், தான் காதலித்த இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு டில்லியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது). ‘லவ் ஜிகாத்’ என்றழைக்கப்படும் சதித்திட்டம் மூலமாக, இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து அவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றிவிடுவார்கள் என்கிற இந்துத்துவவாதிகளின் ஒழுக்கம் சார்ந்த கலாச்சார பீதிதான் ஷாம்லி விஷயத்தில் நாம் பார்ப்பது. 

  •  கிழக்கத்திய மாநிலமான ஒடிஷாவில் ஒரு சூனியக்காரர், வயிற்றுவலிக்கான சிகிச்சை என்கிற பெயரில் 17 நாட்களேயான பச்சிளம் குழந்தையை சூடான இரும்பு ஆணிகள் கொண்டு பச்சை குத்தியிருக்கிறார். இத்தகைய “சிகிச்சை” முறைகள் வெறும் மூட நம்பிக்கைகளால் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளின் கடும் பற்றாக்குறை இருப்பதன் காரணமாகவும் தான் பின்பற்றப்படுகின்றன. இந்த சூனியக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகும்பொழுது, சூனிய முறைகளில் கைதேர்ந்த பெண்கள் வேட்டையாடப்படப்பட்டு கொலை செய்யப்படுவது இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கிறது.           
  • சீக்கிய நம்பிக்கைகளின் “பாதுகாவலராகவும் பிரச்சாரகராகவும்” வடக்கில் உள்ள மாநிலமான பஞ்சாபில், ஆளும் அரசியல் கட்சியே தன்னை பிரகடனப்படுத்தியது. மதத்திலிருந்து அப்பாற்பட்டு அரசு இயங்கவேண்டும் என்கிற கருத்தையேகூட மாநில முதலமைச்சர் எள்ளிநகையாடினார். 
  • · இதனிடையே இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது:  இந்தியப் பிரதமர் “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தை அறிவித்தார். நிதியமைச்சரோ இந்தியாவின் வணிகம் மிகவும் முன்னேறியுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சிவிகிதம் 7 முதல் 7.5 சதவிகிதம் இருக்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 
ஸ்டீ: அரசியல்ரீதியாகப் பார்த்தால், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. உண்மையில் அது மதச்சார்பற்ற ஜனநாயகமாக இருக்கிறதா?

மீரா: ஆம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுதான். நியாயமான சுதந்திரமான தேர்தல் முறை மூலம் எங்கள் ஆட்சியாளர்களை நாங்களே தேர்ந்தெடுக்கிறோம் என்ற வழிமுறையானது பெருமைக்குரிய ஒன்றுதான். இதைவிட, ஏழைகளிலும் ஏழைகளாக, விளிம்புநிலையிலுள்ளவர்கள் அனைவரும் இந்த ஜனநாயக வழிமுறையில் கவனமாக உற்சாகமாக பங்கு பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். ஆனால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் தேர்தல் ஜனநாயக முறையில் அடிமட்டத்திலுள்ளோர் பங்கு கொள்வதில்லை. இந்தியாவிலோ மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைவிட ஏழைகள் மிகப்பெருமளவில் வாக்களிக்கிறார்கள்.

மதச்சார்பின்மை என்பது முற்றிலும் வேறு கதை. அமையவிருந்த புதிய நாட்டின் அரசுக்கு இருக்கவேண்டிய தன்மையை வரையறை செய்யும் “மதச் சார்பற்ற” என்கிற சொல்லை இந்திய அரசியல் சாசனம் தொடக்கத்தில் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, “சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற” என்கிற சொற்களை அரசியல் அமைப்பின் முன்னுரையில் சேர்க்கச் செய்தார். இப்போதைய பாஜக தலைமையிலான அரசு இந்த சேர்க்கையை நீக்கிவிட்டு அரசியல் சாசனம் முன்பிருந்த நிலைக்குத் திரும்ப வேண்டுமெனத் திட்டமிடுகிறது.

சேர்ப்பது, நீக்குவது என்பது ஒருபுறமிருந்தாலும், அரசியல் சாசனம் தன்னளவில் மதச்சார்பற்றதே. சாதி, வர்க்கம் பாலினம், மதம் என்கிற அத்தனை அடையாளங்களையும் கடந்த குடியுரிமையை அது வழங்குகிறது. மத நம்பிக்கை எதுவாக இருந்தாலும் (இல்லாமலேயே இருந்தாலும்) குடிமக்களுக்கு சம உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பாரம்பரிய மதச்சார்பின்மை போல இந்திய மதச்சார்பின் மையை புரிந்துகொள்ள முடியாது. அரசுக்கும், மத நிறு வனங்களுக்கும் இடையே சுவரோ அல்லது வேலியோ கூட இல்லை. மத நம்பிக்கைகளிலிருந்து வெளியேற வேண்டுமென இந்திய மதச்சார்பின்மை அரசை கோரு வதில்லை. மாறாக அனைத்து மதங்களின் உரிமைகளும் சமமாகப் போற்றப்படவேண்டும் என்கிற அளவிலேயே உள்ளது. இந்து மரபில் உள்ள “சகிப்புத்தன்மை”யை மீண்டும் நினைவுபடுத்தியும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையையும் வைத்து இவ்வகை மதச் சார்பின்மை நியாயப்படுத்தப்படுகிறது. 

இந்திய வகை மதச்சார்பின்மையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஏட்டில் உள்ளபடி அரசு அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதாக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிலும் மக்கள்தொகையிலும் இந்துக்களே பெரும்பான்மையினர். எனவே அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ மதமாக இந்து மதமே உள்ளது. அரசின் சின்னங்கள், சடங்குகள், மரபுகள் அனைத்தும் இந்துமதத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. புனித வழிபாட்டுத்தலங்கள், புனித யாத்திரை செல்லுமிடங்களுக்கான சுற்றுலாவை ஆதரிப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரம் வலுப்படுகிறது. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உதவி மறுக்கப் படாத, அவர்களின் உள்விவகாரங்களில் அரசு தலையிடாத சுயேச்சைமுறை நடைமுறையில் இருக்கிறது என்றாலும், அளிக்கவேண்டிய நிதியுதவிகள் எல்லாம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கே செல்கின்றன.

இதைவிட, பொதுவெளிகளில்- மருத்தவமனைகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை எல்லாம் இந்துச் சின்னங்களாலும் குறியீடுகளாலும் நிரம்பியுள்ளன. முக்கிய நிகழ்வுகளின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட இந்து மதச்சடங்குகளை பின்பற்றுகின்றன. இந்தியாவில் மத அடையாளங்கள் இல்லாத பொது இடத்தைக் காண்பது அரிது.

ஸ்டீ: (இந்தியாவில்) அரசியலில் மதம் இப்படி தலையிடுவதால், கல்விக்கொள்கைகளில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கின்றன?

மீரா: தேசியவாத ஆதிக்கத்திற்கு கல்வி ஒரு பாதையாகிவிட்டது என்பதே எனக்கு மிக முக்கிய பிரச்சனையாகத் தெரிகிறது. இந்திய வரலாறு - குறிப்பாக இந்திய அறிவியலின் வரலாறு  இந்தியாவின் சிறப்பு மற்றும் ஒற்றுமை குறித்த கட்டுக்கதைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவே பயன்படுத்தப்படுகிறது. (இதுதான் உண்மையில் என்னை Science in Saffron எழுதத் தூண்டியது. சாதனைகளை நேரடியாகவும், அறிவியலில் இந்திய பங்களிப்புகளை உலகளாவிய ஒப்பீடுகளுடனும் தர விரும்பினேன்).

இந்து தேசியவாதக் கட்சி ஒன்று (பாஜக) ஆட்சியில் இருக்கையில், கல்விக்கு இந்து சாயம் பூசும் வேலைகள் அதிகரித்துவிட்டன. பள்ளியின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவர ஏற்கனவே சில மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கின்றன. யோகா ஏற்கனவே பல பள்ளிகளில் அன்றாட வகுப்புகளில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. கல்விக்கொள்கையை மாற்றி எழுதத் திட்டங்கள் உள்ளன. இந்துமயமான ஒரு பாடத்திட்டம் வந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது.  நாட்டின் உயர்ந்த பதவியில் நரேந்திர மோடி இருக்கையில், இந்துமயமான கல்விக்கான வேலைகள் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் பல மாநிலங்களில் இத்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. வெண்டி டோனிகரின் “The HIndus”  நூலை கூழாக்கும் முடிவை எடுக்க பெங்குயின் பதிப்பத்துக்கு அழுத்தம் தந்த தினாநாத் பத்ரா தான் இந்தப் பெரியளவிலான கல்வி “சீர்திருத்த” இயக்கத்திற்குப் பொறுப்பு. பதிப்பகங்களையும் மற்ற ஊடகங்களையும் அச்சுறுத்துவதும், சுய தணிக்கை செய்யப் பணிப்பதும் சகஜமாகிவிட்டன.

இந்து உரிமைகளைக் கொண்டு கல்வி நிறுவனங்களை சத்தமில்லாமல் கைப்பற்றுவது சில நாட்களாக நடந்து வருகிறது. முதல்முறை பாஜக ஆட்சிக்கு வந்ததன் பலனாக (1998-2004) பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாயின ( “பொதுத்துறை - தனியார் கூட்டு” என்று இதற்கு நாகரிகமாக பெயர் வைக்கப்பட்டது). ஜோசியராகவோ, சாமியாராகவோ மூச்சுப்பயிற்சி வழங்குகிறவராகவோ  ஆகவேண்டுமெனில் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து தொழில்முறை பட்டம் பெற்றுவிடலாம். மேல்தட்டு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட சுய பிரக்ஞை ஆய்வுகள் ( Consciousness studies) என்கிற பெயரில் பட்ட வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. அவை வேறொன்றுமில்லை. வேதாந்தங்களை கற்றுத் தருவதுதான். பிரபலமான குருக்கள், ஆசிரமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ணா போன்ற பக்தி மடங்கள் இவையெல்லாம் இந்த “கல்வித்” திட்டங்களை முன்னெடுக்கின்றன. அரசியல்வாதிகளில், அரசு அதிகாரிகளில், ஏன் பேராசிரியர்களில் கூட பலர் இந்தக் குருமார்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பதால், யாருடைய புருவமும் உயராமல் எந்தக் கேள்வியுமில்லாமல் கல்வித்துறைக்குள் இந்து மதத்தை நுழைப்பது ஓசையின்றி நடக்கிறது. 

இவை எல்லாவற்றையும் விட பாஜக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுப் பேரவைகளிலும் (குறிப்பாக வரலாற்றாய்வு) இந்து தேசிய ஆதரவாளர்களை நுழைக்கின்றன. மார்க்சிய, மதச்சார்பற்ற வரலாற்றாளர்களை “தேசவிரோதிகள்” என்று வெளிப்படையாக இந்திய வரலாற்று ஆய்வுப் பேரவை அறிவிக்குமளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவின் பெருமைமிகு சமூக அறிவியல் மற்றும் மனிதமேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை இந்துமயமாக்கும் திட்டமிருக்கிறது. 

ஸ்டீ: இந்தியாவில் நாத்திகம் என்பது எந்த வடிவத்தில் இருக்கிறது? யார் அதன் வழிகாட்டிகள்? எப்படி நாத்திகம் செயல்படுகிறது? நாத்திகவாதிகளுக்கு ஆபத்துகள் உள்ளனவா?

மீரா: The God Market என்கிற என் அண்மைய நூலில் ஆவணப்படுத்தியுள்ளதைப் போல, இந்தியா பெருமளவில் மதம்சார்ந்த நாடாகவே உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி 96 சதவிகிதமானவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘உங்கள் மதம் என்ன?’ என்கிற கேள்விக்கு நீங்கள் ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று பதிலளித்தால் நீங்கள் இந்து மக்கள்தொகையில் சேர்க்கப்படுவீர்கள். அந்தளவிற்கு மதம் சார்ந்த பாரபட்சம் உள்ளது. தன்னை இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ, சீக்கியராகவோ, பௌத்தராகவோ, ஜெயினராகவோ அறிவித்துக்கொள்ளாத ஒருவர் இங்கு இந்து என்றே புரிந்துகொள்ளப்படுவார்.

இந்தியாவில் நாத்திகம் இருக்கிறது. கண்கட்டு வித்தைகளையும் மூடநம்பிக்கைகளையும் மிக வெளிப்படையாகவும் ஆக்ரோஷமாகவும்  எதிர்த்துப் போராடும் பகுத்தறிவுக் குழுக்கள் பல இந்தியாவில் உண்டு. இணையத்திலும் பகுத்தறிவுக் கருத்துகள் மிகப் பரவலாக உண்டு. ஆனால் பொதுவில் அதன் இருப்பு மிகக் குறைவே.

நாத்திகம் எந்தளவுக்கு இருந்தாலும் அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியே இருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில், இந்து மூடநம்பிக்கைகளையும் இந்து மதத்தின் கட்டுக்கதைகளையும் குறித்து கேள்வி எழுப்பிய முன்னணி அறிவுஜீவிகளில் மூன்று பேர் படுகொலை செய்யப் பட்டனர். இந்துமதக் கண்ணோட்டத்தையும் பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்டதால், நூல் எரிப்புகள், திரைப்படத் தடைகள் போன்றவை அதிகரித்துவிட்டன.

பல்கலைக்கழக வளாகங்களிலும் பொதுவெளியிலும் எழும் மதச்சார்பற்ற குரல்களை ஒடுக்கவும் அச்சுறுத்தவும் அரசு தன் இந்துத்துவ சார்புள்ள மாணவர் அமைப்பை பயன்படுத்தும் ஆபத்தான போக்கு பரவலாகியுள்ளது. இந்த வார்த்தைகளை நான் பேசுகையில்கூட, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிரச்சனை கொழுந்து விட்டெரிகிறது. தலித் (முன்பு தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த) மாணவர் ஒருவர் உயர் அதிகார மட்டத்திலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்திலிருக்கும் இந்துத்வ சார்பு மாணவர் அமைப்பொன்றின் பொய்ப்புகாரை வைத்து  இடைநீக்கம் செய்தது நிர்வாகம். மேல்தட்டு நிறுவனங்களான ஐஐடி போன்றவற்றில்கூட மதச்சார்பற்ற, பகுத்தறிவுக் குரல்கள் (பெரும்பாலும் தலித்துகளால் எழுப்பப்படுபவை) நசுக்கப்படுகின்றன. வெகு சாதாரணமாக அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்ட, அரசே முன்னின்று செய்யும் இந்த அச்சுறுத்தல் ஒருவித பயச்சூழலையும் சுய தணிக்கையையும் உருவாக்குகின்றது.

ஸ்டீ: உங்கள் நூல்களில் நீங்கள் “காவிமயமான அறிவியலை” விவரிக்கிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். அது வெறும் பின்நவீனத்துவ வழக்காறுதானா? அல்லது உண்மையாகவும் உறுதியாகவும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாதகங்கள் இதனால் ஏற்படுமா? எப்படி?.

மீரா: காவியமயமான அறிவியல் எனும்போது, இரு விஷயங்கள் உள்ளன. முதலில், ஆன்மா என்பதன் இருப்பை இறுதியான உண்மையாகக் கூறி அதை மரணத் துக்குப் பிந்தைய வாழ்வு, மறுபிறப்பு போன்றவற்றோடு தொடர்புப்படுத்தும் மரபான இந்து நம்பிக்கைகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளின் சுவடுகளை நவீன அறிவியல் தலையீடு செய்து அழித்திருக்கிறது. இரண்டாவது, நவீன அறிவியல் கோட்பாடுகளான கோபர்நிக்கஸின் சூரிய மையம், பரிணாம வளர்ச்சி அல்லது குவாண்டம் இயற்பியல் போன்ற கோட்பாடுகளை பழங்கால இந்து அறிவியலுக்கான விளக்கம் என திரித்துச் சொல்வது.

காவிமயமான அறிவியலில் பின்நவீனத்துவம் என்று ஒன்று இல்லை. பின்நவீனத்துவம் மற்றும் அதன் இணைப்பான ஞானத்திற்கெதிரான கோட்பாடுகள் அனைத்துமே,  நவீன அறிவியலுக்கும் மற்ற “மாற்று” சிந்தனை முறைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை மறுப்பதன் மூலம் இந்துமயமாதலுக்கு உதவவே செய்கின்றன. தவிரவும், அறிவியல் குறித்த பின் நவீனத்துவ, பின்காலனிய சிந்தனைகள் யாவும் அறிவியல் என்பது  ஒரு மேற்கத்திய மற்றும் காலனிய கட்டமைப்பு என்றே நம்புகிறது. காலனிய நாடுகளின் மூலம் மேற்கு உலகம் உள்ளே நுழைந்ததனால்தான் அறிவியலின் தரவுகள் யாவும் உண்மையாகவும் உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் ஆகின என்கிற கருத்தையே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய பார்வையின்றி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் பாவனையில் பேசும் இந்து தேசியவாதிகளின் மொழியிலேயே பேசுவதாக இக்கருத்துக்களும் அமைந்துவிடுகின்றன.

ஸ்டீ: அறிவியலும் மதமும் சீராக சமரசம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?

மீரா: இல்லை. ஸ்டீவன் வெயின்பெர்கின் அண்மை நூலான "To Explain the World" நூலை மேற்கோள் காட்டி நவீன அறிவியல் குறித்துச் சொல்கிறேன். நவீன அறிவியலின் கண்டுபிடிப்பு என்பது “கணக்கு சூத்திரப்படியும் சோதனைமுறையிலும் மதிப்பீடு செய்யப் பட்ட, தொடர்பில்லாத கொள்கைகள் மூலம் பெருமளவிலான வெவ்வேறு முறைகளை விளக்க முற்படுவது”.

நோக்கங்களுடனான எந்தக் கொள்கைக்கும் இதில் இடமில்லை அல்லது உணர்வுக்கும் இடமில்லை. அது அகம் சார்ந்த கடவுளானாலும் சரி எங்கும் வியாபித்துள்ள சாத்தானாக இருந்தாலும் சரி. கடவுளோ சாத்தானோ ஒரு கவிதையின் உருவகத்தில் இருக்கலாம், அதுவும் ஒரு மனோதத்துவ உதவி போல அவர்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே. அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.

நான் சொல்லவருவது என்னவென்றால், இயற்கை எப்படி இயங்குகிறது என்பதை விளக்குகையில் அதில் கடவுளுக்கும் அல்லது ஆன்மா தொடர்புடைய கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை: இயல்பான உலகம் நவீன அறிவியலிடம் சரணடைய வேண்டி இருக்கிறது. உலகை விளக்க கடவுளைக் கொண்டுவந்தால், சான்றுகளோடுதான் எதையும் விளக்கவேண்டுமென்கிற அறிவியல் சட்டதிட்டங்களுக்கும் இயல்பான உலகளாவிய பார்வைக்கும் பணிந்துபோக வேண்டும். ஆப்ரஹாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் யூதமதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களைப் போலல்லாமல், இந்து இறையியல் பொருளிலிருந்து தெய்வீகத்தைப் பிரித்துப் பார்ப்பதில்லை: பொருள் உலகை உடைத்துக்கொண்டே போனால் அணுக்கள் இருக்கும்- அதாவது பொருள் என்பது படிப்படியாக கட்டமைக்கப்பட்டது. அத்துடன் தூய உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றின் விளைவான இரண்டாம்நிலை நிகழ்வும்கூட. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்துமதம் ஆன்மிகத்தையும் பொருளையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகப் பார்க்கவில்லை. அதுபோலவே மதம் மற்றும் அறிவியல் தொடர்பான விஷயங்களையும் தொடர்புபடுத்தியே பார்க்கிறது. ஸ்டீபன் ஜே கோல்டின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஆன்மீகம், அறிவியல் ஆகியவற்றை வெவ்வேறு- ஒன்று மற்றொன்றின்மீது படியாத படிக்கு இருக்கவேண்டிய- கற்பிக்கும் களங்களாக இந்து மதம் அடையாளப்படுத்துவதில்லை. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சவாலே இவற்றுக்குத் தொடர்பில்லை என நிறுவுவதே- “ஆன்மிக அறிவியல்” என்கிற பொய்யான, இல்லாத அறிவியல் வகையை உடைப்பது தான். தயக்கமே இல்லாமல் நிஜ அறிவியலின் சிறந்த சான்றுகளோடு “ஆன்மிக அறிவியலை” சோதனைக்குட்படுத்திப் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். அதனால்தான் சுவாமி விவேகானந்தாவின் எழுத்துக்களையும் பிரம்மஞானிகளின் எழுத்துக்களையும் விலக்கிவைக்க வேண்டுமென்பதை தலையாயப் பணியாய் செய்துவருகிறேன். ஏனெனில் அவர்கள்தான் முதன்முதலாக,  இந்தியாவில், பொருள் குறித்த ஆய்வில் ஆன்மிக பரிமாணத்திற்கு “அறிவியல்பூர்வமான” நியாயங்களை வழங்கியவர்கள். 

ஸ்டீ: அறிவியல் கல்வியை (அல்லது பொதுவாக கல்வியை) இந்தியாவில் எப்படி சீர்திருத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்? எந்த நாட்டையாவது இதில் முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்களா?

மீரா: இது மிகவும் பெரிய விஷயம். என்னால் இதற்கு பதிலளிக்க இயலுமெனத் தோன்றவில்லை.

உலகளாவிய தரமான கல்வி என்று வருகையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எல்லா இடங்களிலும் பொதுப்பள்ளிகள் வந்தால் அது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிசெய்யும்.

ஸ்டீ: இந்தியாவில் பெண்களும் (அறிவியல்) கல்வியும் - சிக்கல்கள் என்ன? சாத்தியமான தீர்வுகள்?

மீரா: அறிவியல் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பெண்களை சட்டரீதியாகத் தடுப்பது எதுவுமில்லை. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் சகோதரிகளைவிட பெண்களுக்கு இங்கு அதிகமாகவே கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேறுகால விடுப்பு என்று வரும்போதும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் ஊதியத்துடனேயே அவ்விடுப்பு கிடைக்கிறது. 

பெண்கள் பாதை வகுத்திருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணியாற்றுகிறேன். அங்கே உள்நுழையும் பொழுதாவது பாலின சமத்துவம் இருக்கிறது. சக ஆண்களைவிட பெண்கள் துறைரீதியான படிப்பில் வல்லவர்களாக உள்ளனர்.

ஆனால் எல்லா நாடுகளிலும் உள்ளது போல இந்தியாவிலும் தொழில்ரீதியாக முன்னேறிச் செல்கையில் பெண்களின் எண்ணிக்கை குறைவே. அறிவியல் துறையில் பணியைத் தொடரமுடியாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

வீட்டில் குழந்தைகளையும் முதியவர்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  என்கிற பெயரில் கூடுதல் சுமைகளை பெண்கள்மீது சுமத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களும் பொறுப்புகளை உணர்ந்து நியாயமான முறையில் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ளாவிட்டால், பெண்களுக்கு அது பாதகமாகவே முடியும்.

- புது விசை - இதழ் 46 / ஜீலை 2016


No comments:

Post a Comment