Monday, April 3, 2023

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும் - ஆ. சிவசுப்பிரமணியன்

நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாக படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

பொன்னின் ஆகும் பொருபடை யப்படை

தன்னில் ஆகுந் தரணி தரணியிற்

பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்

துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)

பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர், 

“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)

என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன. 

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது, 

“பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்”. (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

 “வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்

நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே” (புறம் 6) 

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும். 

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,

 “எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்

ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை யாகலின்”

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது. 

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு “செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். 

பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. 

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270). 

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து) 

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான். 

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211). 

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனிமனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது. 

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன. 

ராஜராஜ சோழனின் மெய்கீர்த்திகளில் அவனது வெற்றிச்சிறப்புகளில் ஒன்றாக “இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று” என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான். முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940): நாட்டைச் சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான். 

இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். 

பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாசவேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).

பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)

இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார். 

இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி ” . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத்தொகுதிகள்” ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக்கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச்சிறப்பு இராஜஇராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது). 

இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா பொய்யா என்பது புலனாகும். கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது. 

“அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். “ 

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்துகொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக்கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது. 

“தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பிவைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்” (சாஸ்திரி, 1989: 272). 

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281). 

முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056). 

ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறை பிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார். 

1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347). 

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் “ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்” என்று குறிக்கப்பட்டுள்ளது. 

முதல் குலோத்துங்கச் சோழன் (1070—1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன. 

1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். 

2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது. 

3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர். 

திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை “பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்” என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97). 

கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு: 

கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான். 

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான். 

கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.

தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.

 பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று “விஜயாபிஷேகம்” எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579). 

பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார். 

சைவர்களின் முக்கிய புண்ணியத்தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் “சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்” என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. 

சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான். 

“திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி” என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும். 

இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் “பரராஜ அந்தப்புர பந்திகாரன்” என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும். 

தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறைபிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறைமீட்டான். இவ்விரு நிகழ்வுகளையும் ‘திருவய்ந்திரபுரக் கல்வெட்டு’ குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்த செயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ்செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது) 

1. ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு

யாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்தி

ஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்

 

2. கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக் கொடு இருந்து

தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்

விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டரு

 

3. ளி, சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி

நிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர

சமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடி

இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு

 

4.பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்

சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்று

தேவன் திருவுளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி

ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி

 

5.தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்க

னும், சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்

இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்

இருந்த தொழுதகையூரும் அஷ்த்து

 

6.வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன்

ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரை

யும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி

சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு, பொன்

 

7. னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமா

நல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .

வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,

திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்

 

8. களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு, சேந்த

மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்

களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை

கொண்டும் சேந்தமங்கலத்தே எடுத்து

 

9. விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து

சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக

தேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்

ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியை

எழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது உ” 

சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது. 

கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன. நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. 

மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக்கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52). 

இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது) 

ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம்" (மேலது). 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை. 

60 லட்சம் பெறுமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கிவந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான். பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார். அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142). 

தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான். 

ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின்மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து: அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள் - என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8). 

‘ஸ்ரீ குருஜி’ குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா? படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான். முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார். 

"அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை." 

தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான். பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர். இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder’, ‘The Cholas in the 11th Century Ceylon’ (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள்) என்று தலைப்பிட்டுள்ளார். 

சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும். அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ, அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும், அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள். இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல. 


தட்ஸ்தமிழ்.காம் இதழ்வழியே வந்த புதுவிசை மார்ச் 2005 இணைய இதழ்

 

Tuesday, November 9, 2021

குறவர் பழங்குடி : போராட்டத்தில் அலைவுறும் வாழ்வு - மணிகோ.பன்னீர்செல்வம்

 பண்டைய தமிழ்த்திணைப் பாவகைபாட்டிற்குரிய குறிஞ்சிநில மக்களான குறவர்  பழங்குடிகள் (kuravar Tribe) பிற சமூக உழைக்கும் மக்கள் படும் பொதுவான சிக்கல்களையும் சந்திக்கின்றனர். தங்களுக்கேயுரிய தனித்துவமான சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர்.  இச்சிக்கலுக்கு எதிராக நீண்டகாலம் போராடியும் வருகின்றனர். குறவர் பழங்குடிகளின் தனித்துவமான சிக்கலைப் பகுத்து, அதை விவாதித்து அவர்கள் போராடிவரும் நிலை குறித்த இக்கட்டுரை புதுவிசை 40ஆவது இதழில் வெளியானது. 

கட்டுரையாளர் மணிகோ.பன்னீர்செல்வம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப்பேராசிரியராக பணியாற்றுபவர்.  


அ.பழங்குடி / இந்து- குறவன் (SC) சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்டது. இதில் பல குறைபாடுகள் இருப்பதை விமரிசனம் செய்யலாம். இருந்தபோதிலும் பிற்காலத்தில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பட்டியலைத் தயாரிப்பதற்கு விடுதலைப் பெற்ற இந்திய அரசுக்கு இதுதான் உதவியாக இருந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியல் 1950இல் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு இன்றுவரையிலும் கூட பல சாதிகள் பட்டியலில் சேர்த்தும் சில சாதிகளை நீக்கியும் அவ்வப்போது அரசு பட்டியலை மாற்றி வந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் (SC)  மற்றும் பழங்குடியினர் (ST) பட்டியலில் பல்வேறுதரப்பினர் தங்களை சேர்க்க வேண்டுமென்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரமுண்டு. மாநில அரசுகள் பரிந்துரை மட்டும் செய்யலாம். தமிழக அரசு, சில இனங்களைப் பழங்குடிபட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகி யும் கிடப்பிலுள்ளது. இத்தகைய பிரச்சனையில் மத்திய அரசு மிகுந்த அலட்சியத்துடன் பொறுப்பற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். 

இச்சூழலின் பின்னணியில் குறவர் பழங்குடிகளும் சாதிச்சான்றிதழ் சிக்கலை எதிர்கொள்கின்றனர். குறவர் பழங்குடி சான்றிதழ் கேட்டால், ‘எந்த மலையில் நீங்கள் வாழ்கிறீர்கள்?’ என்று கேட்டும், சில பகுதிகளில் குறவன் தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்கூட கிடைக்காமல் அலைக்கழிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறவர் சமூகமானது 27 பிரிவினராகப் பகுக்கப்பட்டு அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மலைக்குறவன் என்றால் பழங்குடியினர் (ST) என்றும் குறவன் என்றால் தாழ்த்தப் பட்டோர் (SC) என்றும் குறவர் என்றால் கண்காணிக்கப்பட்ட சீர்மரபினர் என்றும் தமிழகத்தின் அனைத்து பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ளது தான் குறவன் உள்ளிட்ட பிரிவினர் சந்திக்கும் சிக்கலில் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. 

இதற்கெதிராக குறவர்பழங்குடி இயக்கத்தவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறவர் பழங்குடிகளைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்ற ஒரு தவறான பரிந்துரையை 1989ஆம் ஆண்டு தமிழக அரசு அனுப்பியது. இப் பரிந்துரைகள் 2002ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட் டது. இந்த பரிந்துரைகள் மானிடவியல் துறை வல்லுநர்களின் ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு தமிழக அரசால் அனுப்பபடவில்லை. எனவே, மேற்படி இனமக்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் சம்பந்தமாக ஆய்வினை மேற்கொண்டு  அதன் அடிப்படையில் பரிந்துரைக்கு அறிவுறுத்தியது மத்திய அரசு. 

இதற்கு மத்திய அரசு எடுத்துக்கொண்ட காலம் 25ஆண்டுகள் என்பதை கவனத்தில் கொண்டால் மத்திய அரசின் அலட்சியத்தையும் மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையையும் புரிந்து கொள்ளமுடியும். மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, ஊட்டியிலுள்ள தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திடம் ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை தமிழக அரசு 2002இல் ஒப்படைத்தது. அவ்வமைப்பு 2004ஆம் ஆண்டு ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. பெறப்பட்ட இந்த ஆய்வறிக்கையை அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. பலமுறை வற்புறத்திய பிறகும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டிய போதும் ஏதும் நடக்கவில்லை. 

உடனே, 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’உள்ளிட்ட பழங்குடி மக்களின் அமைப்புகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் மேற்படி கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு சென்றன. முதல்வர் பொறுப்பேற்ற 2006 ஜூலை மாதம் 13ம் தேதி முதல்வரை (கருணாநிதி) சந்தித்து வற்புறுத்தின. 14.08.2006 அன்று குறுமன்ஸ் இன உட்பிரிவைத் தவிர மற்ற இனத்தவரை பரிந்துரை செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியது. 21.11.2006 அன்று டில்லி வரை சென்று கண்காணித்தபோதுதான் மேற்படி பரிந்துரைகள் பழங்குடியினர் நலத்துறைக்குப் பதிலாக சமூகநீதி- அதிகாரமளித்தல் துறைக்கு தவறாக அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து 07.12.2006 அன்று முறையாக மத்திய அரசின் பழங் குடியினர் நலத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

மலைவாழ் மக்கள் சங்கத்தார் 11.05.2007 அன்று பெல்லார்மின் எம்.பி.யுடன் சென்று இந்தியப் பதிவாளரையும், பழங்குடியினர் நலத்துறை செயலாரையும் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜனும் முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்திய பிறகு குறவன் மற்றும் 27 பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்க 23.10.2008 அன்று பரிந்துரைக்கப்பட்டது. இவ்விடத்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. முதலில் இந்திய பதிவாளர் தனது ஒப்புதலைத் தரவேண்டும். அடுத்து பழங்குடியினர் தேசிய ஆணையம் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்கடுத்து பழங் குடியினர் நலத்துறை அங்கீகரிக்க வேண்டும். பிறகு மத்திய அமைச்சரவை, இறுதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் என ஏறி இறங்கவேண்டும் என்பதே அந்தத் தடைகள். 

2009 ஆகஸ்ட் 4ஆம் தேதி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் காந்திலால் புரியா, பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் மோரிஸ் குஜோர், இந்தியப் பதிவாளரின் நேர்முக உதவியாளர் டாக்டர் சந்திர மவுலி ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலத் துணைத்தலைவர் ராசப்பன் குறுமன்ஸ் பழங்குடிமக்கள் சங்க பொதுச்செயலாளர் வீரபத்ரன், துணைப் பொதுச்செயலாளர் வீரபத்ர சேகர், தமிழ்நாடு குறவன் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், வேலூர் மாவட்ட தலைவர் ஜி.பெருமாள், பழங்குடி மக்கள் மறுமலர்ச்சி சங்கத்தின் தலைவர் தணிகாசலம் ஆகியோர் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. விஜயராகவன் உடன் வந்து உதவினார்.  (பழங்குடிப் பட்டியல்: இன்னும் எத்தனை தடைகள்? பி.சண்முகம், தீக்கதிர், 13.8.2009, மதுரை) 

ஆனாலும் நீண்டகாலமாக ‘குறவர்’ இனத்தவர்க்கு பழங்குடி மக்கள் என்னும் அங்கீகாரம் நிலுவையிலேயே உள்ளது. மார்க்சிஸ்டு கட்சி, மலை வாழ்மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவர் பழங்குடிமக்கள் சங்கம் போன்ற பல அமைப்புகள் குறவர் பழங்குடிகளை, பழங்குடிப்பட்டியலில் சேர்க்க எவ்வளவோ முயன்ற போதும் அது நிறைவேறவில்லை. இச்சூழ்நிலையில் ‘தமிழ்நாடு’ குறவரின் அமைப்புகளின் கூட்டுக்குழு முதல்வர்க்கு மனுவொன்றை அளித்துள்ளது. இக்கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு.காவடி எம்.சுந்தரராஜன், செயலராகத் திரு.குடந்தை முருகேசன் ஆகியோர் செயல்படுகின்றனர். இக்குழு சில பரிந்துரைகளை அளித்துள்ள நிலையில் தொடர்ந்து குறவரின் போராட்டத்தில் புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது. அக்கண்ணோட்டம் பின்வருமாறு:

1. மலைவாழ் பழங்குடியான குறவர், சித்தனார் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் (வ.எண்:36) மலைக்குறவன் பழங்குடிப்பட்டியலிலும் (வ.எண்:23) தமிழறியா ஆங்கிலேயர் செய்தொழில், வசிப்பிடத்தைக் கொண்ட பேச்சுவழக்காய் ‘கொறவர்’ என்று 27 அழைப்புப் பெயரில் தனித்தனிச் சாதியாய் மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் பட்டியலிலும் மிகையாகச் சேர்க்கப்பட்டுள்ளது (வ.எண்:1, 2, 8, 10, 13, 16, 18,  19, 23, 25, 30, 31, 33, 35, 37, 44, 50, 51, 52, 56, 59, 60, 62, 63, 66, 67) குறவர் இனமாகும். இதனால், பல்வேறு இடங்களில் குறவன் மக்கள் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் சான்றிதழ் பெறமுடியவில்லை. 

2. குறவரினத்தில் இருக்கும் இதே குழப்பம் பறையர் சமூகத்தைச் சுட்டுவதற்கும் இருந்தது. பறையர் அழைப்புப் பெயரான ‘வெங்கனூர் ஆதிதிராவிடர்’, ‘வேப்பூர் பறையர்’ என்பதே அது. இப்பறையர் என்பார் DNC பட்டியலில் இருந்து பின்னர் நீக்கப்பட்டனர், ஆதிதிராவிடர் (SC) எனச் சான்றிதழும் வழங்கப்பட்டது. (அரசாணை எண்: 866, 29.3.1985) சமூக நலத்துறையும் ஆணை பிறப்பித்தது. 

3. வெங்கனூர் பறையர், வேப்பூர் பறையர் இரண்டு அழைப்புப்பெயரும் ஆதிதிராவிடர். பறையர் அன்றி வேறு சாதியல்ல. அவற்றை சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கப் பரிந்துரைத்த அதே காலத்தில்தான் 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு இரண்டாம் பிற்படுத்தப்பட்ட ஆணையம் (அம்பாசங்கர்  ஆணையம்) குறவரின் 27 வகை அழைப்பு பெயரையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள குறவனின் இணைப்பெயர் தாம் என்னும் சீர்மரபினர் பட்டியலிலுள்ள 27வகை ‘கொறவர்’ பெயர்களையும் நீக்கவும் பரிந்துரை செய்தது. 

4. அம்பாசங்கர் ஆணையத்தின் மீது முடிவெடுத்து பறையர் அழைப்புப்பெயரை நீக்கிய தமிழக அரசு, அதற்கான சமூக நலத்துறை அ.எ:1564 நாள்: 30.07.85ஐ வெளியிட்டது. ஆனால் குறவர் இனத்தின் 27 அழைப்புப்பெயர்களை அம்பா சங்கர் ஆணையை ஏற்காமல் ‘கு’றவன், ‘கொ’றவன் இரண்டும் ஒன்றே என்பதற்கு மைய அரசுடன் கலந்தாய்வு செய்து, அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படுவதால் குறவரின் 27 பெயர்களும் சீர்மரபினர் பட்டியலில் இருக்கட்டும் என வைத்துவிட்டது.

5. 2002 ஆம்ஆண்டு, ஊட்டி பழங்குடி ஆய்வுமையம் SC, DNC பட்டியலிலுள்ளவர்களை கொறவர் எனும் ஒரே பெயரில் இணைத்து பழங்குடிப் பட்டியலில்  (ST) சேர்க்க பரிந்துரைக்க, மாநில அரசும் அதனை ஏற்று நடுவண் அரசிற்கு அனுப்பிவைத்தது. ‘கொறவர்கள்’  (koravars) என்ற தலைப்பிலிருக்கும் அத்தனை அழைப்புப்பெயர்களையும் ‘கொறவர்’என இணைக்க வேண்டும் என்றால் முதலில் ‘கொறவர்’ என்ற பெயருக்குச் சாதகமாக DNC பட்டியலில் இருந்து நீக்கினால்தான் அது இயலும். எனவே,  தமிழ்நாட்டு அரசு தனக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி முதலில் அழைப்புப்பெயர்களை DNC ட்டியலிலிருந்து நீக்கிய பிறகே மைய அரசிற்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். 

6. பரிந்துரையில், அனைத்துப்பெயர்களையும் கொறவர் என்ற ஒரே பெயரில் இணைத்து ST ஆக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, 27 வகை பெயர்களையுமே ST பட்டியலுக்குக்  கொண்டு போக வேண்டுமென்று குறிப்பிட்டுவிட்டது (Letter No.25410/ADW 10/2004-1, dt.14.08.2006 of ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPT.) முக்கிய தவறாகும். 

7. இதன் விளைவாக 26க்கு மேற்பட்ட பெயர்களை ST பட்டியலுக்குக் கொண்டு செல்ல முடியாத நடைமுறைச் சிக்கலை சுட்டிக்காட்டி இந்திய தலைமைப் பதிவாளர்  (RGI) அலுவலகம் அத்தனை (27) அழைப்புப்பெயர்களும் தனித்தனிச் சாதிகளே என்று முடிவு எடுத்து கோப்பினை மனு விளக்கம் கோரி தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டது. 

எனவே, ST தகுதி பெறுவதற்கு பெரும் தடையாக இருப்பது DNC பட்டியலிலும் இடம் பெற்றுள்ள 27 அழைப்புப் பெயர்களே ஆகும். அதனால் அம்பாசங்கர் ஆணைய பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி  STபட்டியலிலுள்ள ‘குறவன்’, ‘சித்தனார்’ என்கின்ற பெயர்களுக்கு சாதகமாக DNC பட்டியலிலுள்ள 27 அழைப்பு பெயர்களை நீக்கி  STக்கான பரிந்துரையை மைய அரசுக்கு அனுப்பினால் குறவன், சித்தனார் எனும் ஒரே சாதியை  STஆக்குவதற்கு 27 பெயர்களையும் இணைத்து  STபட்டியலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே முழு சாத்தியமுள்ளது என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்ற நிலையில் பழங்குடிச் சான்றிதழ் சிக்கல் தொடர்கதையாக உள்ளது. 

ஆ. திருட்டு -  கொள்ளை என பொய்வழக்கு - லாக்கப் சித்தரவதை: 

குறவரின மக்கள் சந்திக்கும் மிக முக்கிய சிக்கல் இது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குறவன் மற்றும் கள்ளர், மறவர் ஆகிய இனங்கள் ‘குற்றப் பரம்பரையினர்’எனும் கொடியச்சட்டத்தில் வைத்து குற்றவாளியாக்கி கொடுமை புரிந்ததை நாமறிவோம். இதற்கெதிராக கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோரும், பசும்பொன் முத்துராமலிங்கம் போன்றோரும் போராடி CT Act எனும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்கினர். 1952இல் இது நீக்கப்பட்டபோதிலும் குறவன் இன மக்கள் மீதான தாக்குதல் மட்டும் தொடர்கிறது. குறவனின மக்கள் மட்டுமே குற்றம் செய்திட பிறந்தவர்கள் போலவும், படித்து பட்டம்  பெற்று சுயமரியாதையுடன் வாழ மறுப்பவர்கள் போலவும் திட்டமிட்டு தமிழக காவல்துறை இன்றளவும் தொடர்ச்சியாகப் பொய்வழக்குப் போட்டு சீரழித்து வருகிறது. எந்தப் பகுதியில் திருட்டுக் குற்றங்கள் நடந்தாலும் உடனே அந்தப்பகுதியில் வாழும் குறவனினத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்துவைத்து, அடித்து சித்ரவதை செய்தல்- செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வைப்பது - பொய்வழக்கு போடுவது -  அடித்துக் கொன்றுவிடுவது - என்று காவல்துறை செயல்படுகிறது. இதனால், குறவனின மக்கள் அன்றாடம் அஞ்சிஅஞ்சி வாழ் கின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். ‘குறிஞ்சி நில மைந்தர்கள்’ என்று பெருமையோடு சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட வேட்டைச்சமூகம், காவல்துறையின் பொய்வழக்கு வேட்டைக்கு இரையாகி வருகின்றது. எனவே ‘குறவன்’ என்று வெளியில் தெரிந்தாலே கேவலம் என்று கருதி தமது இனத்தையே மறைத்து வாழ்ந்துவருகின்றனர். 

ஒருமுறை திருட்டு வழக்கில் காவல்துறையிடம் சிக்கிவிட்டால் அக்குடும்பம் மண்ணுக்குப் போகிறவரை தப்பமுடிவதில்லை. குறவர் மீதான தாக்குதல்களான அடிப்பது, காயப்படுத்துவது, வீடு புகுந்து அங்கு இருக்கும் குறைந்த பட்ச பொருட்களை தூக்குவது, உற்றார் உறவினர் மீதும் வழக்குபோடுவது. சிக்கிக் கொண்டவனின் குடும்பப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது, எல்லையற்ற கொடுமைகள், பொய்வழக்குகள், கொட்டடி சித்ரவதை என கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள கொடுமைகள் ஏராளம். அவற்றின் பட்டியல் பின்வருமாறு: 

1. 30.11.1997இல் வேலூர் மாவட்டம் பொன்னை கிராமத்தைச் சார்ந்த 5 குறவன் இன மக்கள் திருவள்ளுவர் மாவட்ட போலீசாரால் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு மனைவி மக்களுக்கும் தெரியாமல் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்யப்பட்டனர். செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து, தாம் திருடிவைத்திருந்த நகைகளை அந்த ஊர் பெரிய மனிதர்களிடம் கொடுத்ததாக சொல்லச் சொல்லி நகை, பல லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்தனர்.  11 பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளினர். இதில் அனைத்து வழக்குகளும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. (ஏ.வி.சண்முகம், குறிஞ்சி நில மைந்தர்களின் குமுறல், தீக்கதிர், 3.2.2011, சென்னை) 

2. விருத்தாச்சலம் முதனை கிராமத்து ஆர்.ராஜாக்கண் ணுவை 19.03.93 அன்று நகைத்திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்துவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில், கொலை செய்த சப் இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் 2பேருக்கு 31.05.2004ல் விருத்தாச்சலம் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுக்குப் பின் உயர் நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதி செய்து தற்போது குற்றவாளிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். (மேலது) 

3. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நயினார்குப்பம் குளத்துமேட்டைச் சார்ந்த என்.நாராயணன் (அகவை 25) திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1.06.2004இல் இறந்து போனார். (மேலது) 

4. அன்றைய தருமபுரி மாவட்டம் எலச்சூர் கிராமத்தில் வாழும் கோவிந்தசாமியின் மகன் ஆனந்தன் என்பவரை தேடுகிறோம் என்ற பெயரில் ஆனந்தனுடைய தகப்பனார், மனைவி, தம்பி, தம்பி மனைவி மணிமேகலை, உறவினர் விஜயா ஆகிய அனைவரையும் கைது செய்த வாணியம்பாடி காவல்நிலையத்தினர் அடித்து, உதைத்து, உலக்கையில் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். பெண்களை மானபங்கப்படுத்தி மங்கை, மணிமேகலை ஆகிய இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததை கேள்விப்பட்ட சி.பி.எம். தலைவர்கள் தலையிட்டதும், ‘பிக்பாக்கெட்’ அடித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.( பிரண்ட் லைன், சூன் 6, 2002) 

5.விழுப்புரம் மாவட்ட பரிந்தல் கிராமத்தைச் சார்ந்த ரவி என்ற வாலிபரை 16.08.2010 அன்று இரவு கைது செய்தனர். 18.08.2010 அன்று நடுவீரப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்து கொன்றனர். ஆனால் விசாரணைக்கு அழைத்துவரும்போது தப்பி ஓடியதாகவும், விரட்டும்போது மரத்தில் மோதி இறந்துவிட்டதாகவும் போலீசார் கூறினர். போச்சம்பள்ளி, தேனி, சமயபுரம், டால்மியாபுரம், உப்பிலியாபுரம், ஒட்டன்சத்திரம், இராமநாதபுரம், கமுதி, திருச்சி கண்டோன்ட்மெண்ட், திருப்பூர் டீ1 காவல்நிலையம், பரமக்குடி நகர காவல்நிலையம், கோவை மதுக்கரை, திருப்பூர் நல்லூர், ஊத்தங்கரை, நல்லவன்பட்டி, பள்ளிப்பாளையம் கரூர் குளித்தலை, திண்டுக்கல் நிலக்கோட்டை என பல பகுதிகளில் இன்றுவரை குறவரினத்தின் மீதான பொய்வழக்குகள், லாக்கப் சித்ரவதைகள் தொடர்கின்றன. (தலித் முரசு, அக்-2010, புதிய கோடாங்கி, ஏப்-2012) 

‘இந்திய அசமைப்புச் சட்டம் மனிதஉரிமைகள் பற்றிய 15ஆவது பிரிவில் மதம், இனம், சாதி, பால், பிறந்த இடம் இவற்றில் ஏதாவதொன்றின் காரணமாக மட்டுமே அரசு குடிமக்களில் எவரையும் ஓரவஞ்சனை செய்யாது’என்கிறது. ஆனால், இந்த  நாட்டில் வாழ்கின்ற பல்வேறு சாதிப்பிரிவி னரில் ஒரு சாதிப்பிரிவினரான தொல்பழங்குடி மக்களான குறவன் இனத்தை மட்டும் அவன் ‘குறவனாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக’ குற்றச்செயல் புரிபவன்களாகச் சித்தரிப்பது, பொய் வழக்குப் போடுவது அவனது நியாயங் களை நிராகரிப்பது, உரிமைகளை மறுப்பது என அரசும், அதிகாரிகளும், காவல்துறையும் வஞ்சித்து வருவது தொடர் வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்மக்களிடையே போராட்டக்குரல்  மெல்ல வலுத்தும் வருகிறது. 

இ. குறவரின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு: மாறுதல்கள்

பொதுவாக குறவர்கள் தங்களது பொருளாதார ஒழுகலாறுகளாக கூடை முடைதல் எனும் கைவினைக்கலையின் மூலமாகவும், இறைச்சிக்காக பன்றி வளர்த்தல் போன்ற தொழில்கள் மூலமாகவும், குறிசொல்லுதல் என்கிற மரபார்ந்த சடங்கியல்சார் தொழில் மூலமாகவும் தங்களது பொருளாதார தேவைகளை நிறைவு செய்துகொள்கிறார்கள் என்று இதுவரை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இன்றைய சூழலில் குறவர்கள் தங்களது பொருளாதார வாழ்வில் பல்வேறு தொழில்களை கைகொண்டு வருகிறார்கள். 

மேற்கண்ட பின்புலத்தில்தான் குறவர் இன மக்கள் குறித்த பொதுவான தொழில்சார் அடையாளங்கள் இன்று உள்ளது. இந்த விவரங்கள் பலகட்டங்களில் ஆய்வுகளாக கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றாலும் நகரம் சார்ந்து தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அல்லது நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்த குறவர் பழங்குடி மக்கள் தங்களது பொருளாதார நலன் சார்ந்த நிலைகளில் மேற்கொள்ளும் முனைப்புகள் குறித்து தெளிவான முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிக்கட்டத்தில் உள்ள நகரங்களிலும் வாழ்ந்துவரும் குறவர் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு தேவையாக உள்ளது.

இதில் ஒருபகுதியாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்களது குடியிருப்புகளை அமைத்துக்கொண்ட குறவர் பழங்குடி மக்களைத்தேடி நமது களப்பயணம் அமைந்தது. குறிப்பாக கோயம்பேடு அருகில் சின்மயா நகர் பகுதியில் உள்ள குலசேகரபுரம், வில்லிவாக்கம், பெரம்பூர், தாம்பரம், ஆவடி, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் குறவர் பழங்குடி மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விலிருந்து நாம் அவர்களது கல்வி பொருளாதார, வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து தெளிவான புரிதலுக்கு வர முடியும். 

கல்வி 

கல்வியறிவு சார்ந்த புள்ளிவிவரங்களில் அடிப்படைக் கல்வி என்பதற்கான வரையறை 8ஆம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். 8 முதல் 10 வரை, 12 ஆம்  வகுப்புவரை, பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு வரை என்று மேலும் வகைப்படுத்திக் கொண்டோம். இந்த ஆய்வின் வரையறைகளோடு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,615 நபர்களை இந்த ஆய்விற்காக எடுத்துக்கொண்டதில் பொதுவாக கல்வியறிவு பெற்றவர்கள் என்று பார்க்கிறபோது 950 பேர்களாக உள்ள னர். 480 பேர் அடிப்படைக் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதாவது 58 சதவித நபர்கள் அடிப்படைக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். குறிப்பாக சுட்டுவதெனில் 10ஆம் வகுப்புவரை 230 நபர்கள், 12ஆம் வகுப்புவரை 70 நபர்கள், பட்டயபடிப்பு  55 நபர்கள்,  பட்டப்படிப்பு 115 நபர்கள் என படித்துள்ளனர். மீதமுள்ள 665 நபர்கள் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். 

வேலைவாய்ப்பு

ஆய்வுக்குட்படுத்திய 500 குடும்பங்களின் 1615 உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு குறித்து தகவல் திரட்டியதில் சராசரியாக 700 நபர்கள் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும், மீதமுள்ள 915 நபர்கள் முறைசாரா வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். முறைப்படுத்தப்பட்ட வேலை என்கிற வகையில் அரசுப்பணிகளில் 80 நபர்களும், தனியார் நிறுவனங்களில் 105 நபர்களும், சுயதொழில் மேற்கொள்பவர்கள் 500 நபர்களும், இதர வீட்டு உதவிப்பணிகள் 15 நபர்களும் செய்கின்றனர். அரசு வேலைகளை பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் கடைநிலை பணியாளர்களாகவும், சென்னை மாநகராட்சி துப்புரவுத் தொழில் மற்றும் பேருந்து ஓட்டுநர்களாகவும் பணியாற்றுகின்றனர். தனியார் துறை வேலை என்று பார்க்கிறபோது டேட்டா என்ட்ரி (தகவல் உள்ளீடு) பணிகளிலும், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களிலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும், பணியாற்றுகின்றனர். தவிர முறைசாரா தொழில்களாக ஓட்டுநர், ஆட்டோ  ஓட்டுநர், தலைச்சுமை வியாபாரம் செய்வது, மீன்பாடி வண்டி ஓட்டுவது, மீன் வியாபாரம் என வகைப்படுத்த முடிகிறது. ஆட்டோ ஓட்டுபவர்களிடம்  முக்கியமான விஷயமாக கவனித்தது, அதில் 12 நபர்கள் சொந்த ஆட்டோவை வைத்து தொழில் செய்துகொண்டிருக்கின்றனர். 

பொருளாதாரம்

பொருளாதார நிலைமைகளை பொறுத்தவரை அவர்களது தொழிலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. இந்த வகையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 500 குடும்பங்களின் நிலைமைகளை இப்படி வகைப்படுத்தலாம். ரூ.5000த்துக்கும் குறைவான மாதவருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 255 ஆகவும், 5000 ரூபாயிலிருந்து 8000 ரூபாய்வரை வருமானம் கொண்டவர்கள் 135 குடும்பங்களாகவும், ரூபாய் 8000த்திற்கும் அதிகமாக வருமானம் கொண்டவர்கள் 110 குடும்பங்களாகவும் உள்ளனர். 

மேற்குறிப்பிட்ட ஆய்வுகளிலிருந்து குறவர் பழங்குடி சமூக நிலைமைகள் குறித்தும், அவர்களது சமூக பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பொதுவாக புரிந்துகொள்ள முடிகிறது. நகரமய வாழ்க்கைச்சூழலில் குறவர் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார அடையாளங்கள் மாற்றம் பெற்று வருகிறது. குறிப்பாக  நகர்மய கலாச்சாரக் கூறுகளோடு ஒன்றிணைவது, ஆங்கிலவழிக் கல்வி, தொழில்நுட்ப மற்றும் ஊடகம் சார்ந்த கல்விகளுக்கு சமீபகாலங்களாக  முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனனர். இதன் தொடர்ச்சியாக தங்களது மரபு அடையாளங்களை தொலைப்பதும் அல்லது மறைப்பது போன்றவற்றுக்கும் முற்படுகின்றனர். அதேசமயத்தில் தங்களது சமூகச்சடங்கு சார்ந்த விஷயங்களில் மட்டும் தங்களது சாதிப்பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ளும் போக்கும் உள்ளது.  

நமது ஆய்வு நகர்புறங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் குறவர் பழங்குடி மக்களைக் குறித்துதான் என்றாலும், இவர்கள்  சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கிடையாது. அலைகுடி சமூகத்தின் ஓர் அடையாளக்கூறாக இருக்கும் இடம்விட்டு இடம் பெயர்வது என்கிற ஒரு பண்பாட்டு நடவடிக்கையிலிருந்தும் இதை அணுகலாம். 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு  இடம் பெயர்ந்துள்ள அவர்களில் கணிசமானவர்கள் திருவண்ணாமலை சார்ந்த பகுதியிலிருந்து குடியேறிவர்கள். கடந்தகாலங்களில் வேளாண்  பொருளாதாரத்தில்  ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாக அதைச் சார்ந்த சார்புக்குடிகளாகவும் இருந்த குறவர் பழங்குடிகளும் இடம் பெயர நேர்ந்துள்ளது. 

குறவர் பழங்குடி இயக்கங்களும் போராட்டங்களும் 

மேற்கண்ட ஆய்வுப்பொருளை மையமாக கொண்டு குறவர் சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. பொதுவாக குறவரினச் சங்கங்கள் 1940களின் நடுப்பகுதியிலிருந்து செயல்படத் தொடங்கியதாக அறிய முடிகிறது. அரசியல் போராட்டம், இனச்சீர்திருத்தம் என்னும் இரண்டு கோணத்தில் இம்மக்களின் போராட்டங்கள் அமைந்து வந்துள்ளன. அடிப்படை வசதிகளுக்கென (உணவு, உடை, உறைவிடம்) போராடியதைவிட தங்களை மலையினமாக அடையாளப்படுத்திக்கொள்ள போராடிய போராட்டமே அதிகமாக இருந்துள்ளது. இதற்கு குறவரினத்தின் அனைத்துச் சங்கங்களும் போராடின. சான்றாக, 1.தமிழ்நாடு குறவர் மகா சனசங்கம் (1945) 2.தஞ்சை மாவட்ட மலைக்குறவன் மகாசன சங்கம், 3. குறவன் முன்னேற்றச் சங்கம் 4. தமிழ்நாடு குறவன் சமுதாய நலச்சங்கங்களின் கூட்டமைப்புச் சங்கம் 5.மதுரை மாவட்ட குறவன் சமுதாய நலச்சங்கம் 6.குறவர் பழங்குடி மக்கள் சங்கம் (2000) போன்ற இயக்கங்களைச் சுட்டலாம். 

மேலும் குறவர் சங்கங்கள் சமய மரபின் தொடர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளான முருகன் கோயில்கள் தங்களுக்கே பாத்தியப்பட்டது எனவும் அறங்காவலர் பணியைத் தங்களுக்கே வழங்க வேண்டுமெனவும் அரசின் முன் கோரிக்கை வைத்துப் போராடின. பழனி குறவர் மடத்தை மீட்க குறவர் முன்னேற்றக் கழகம் நிதியும் திரட்டியது. குறவர் சங்கங்கள் தங்களின் மலையினம் சார்ந்த பல்வேறு அடையாளங்களை முன் வைத்து கடந்தகாலங்களில் போராடி வந்திருக்கின்றன. இதில் முதன்மையானது சாதிச்சான்றிதழ், சமய மீட்பு, குறவர் மக்கள் மீது போடுகின்ற பொய் வழக்குகளுக்கு எதிரான போராட்டம் (விடுதலைச்சிறுத்தைகளோடு இணைந்து தமிழ்நாடு  குறவர் பழங்குடி மக்கள் சங்கப் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து குறவன் முன்னேற்ற சங்கப் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் குறவர் பழங்குடி விடுதலை முன்னணியும் இணைந்து நடத்திய மாநாடு) என தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. ஆனாலும் குறவர் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது. 

கல்வியுரிமை, அதிகாரப்பங்கீடு சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க குறவர் சங்கங்கள் போராடவேண்டிய தேவையை அவ்வளவாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. குறவர் இனம் தாழ்த்தப்பட்ட சமூகமா? பழங்குடியா? என்னும் அடையாளச்சான்றைப் பெறுவதில் பலவிதப் பார்வையும் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. 

Tuesday, September 29, 2020

ஆதி-திராவிடர்: சாதியற்ற சமத்துவத்தின் அடையாளம் கோ. ரகுபதி

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால் பறையர்களை மட்டுமே சுட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம்  இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.  அச்சொல் உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர், பள்ளர், சக்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவும், தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கும் அதேநேரத்தில் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாக பரிணமிக்க முயற்சித்திருக்கும் வரலாற்றினையும் நிறுவுகிறது.             

முன்னுரை: சாதிப்படிநிலையை பிரதிபலிக்கும் பெயர்

 இந்திய சாதியச் சமூகத்தில் பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் அம்பேத்கரிடமிருந்து கிடைக்கிறது: பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான பங்கை வகிக்கின்றன.  பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள்.  ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்கிறார்கள் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467). 

அம்பேத்கரின் இக்கூற்று விளக்குவதாவது: ஒருவரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக, பொருளாதாரப் படிநிலையைப் பிறருக்கு எடுத்துரைக்கும் தனிச்சிறப்பினைப் பெயர்கள் பெற்றிருக்கின்றன. சமூகப்படிநிலையைப் பிரதிபலிக்கும் தன்மையைப் பெயர்கள் பெற்றிருக்கின்ற பொழுது, பெயர் சூட்டுதல் என்னும் நிகழ்ச்சி இந்தியச் சமூகத்தில் தனிநபர்களின் / தனித்த சாதிகளின் சுதந்திர உரிமைக்குட்பட்டதாக இருந்திருக்கிறதா? அல்லது புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறதா? ஆம் என்றால் அப்புறக் கட்டுப்பாடு எது? என்ற கேள்விகள் இவ்விடத்தில் தவிர்க்க இயலாததாய் எழுகிறது.  இந்தியாவிலுள்ள சாதிகளின் தொழில், உணவுப்பழக்கம், ஆண், பெண் உறவு என சகலத்திற்கும் கறரான சட்டங்களை வகுத்தளித்திருக்கும் மநு நால்வருணத்திற்குள்ளிருக்கும் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் வழங்கியிருக்கும் பெயர் என்ற அடையாளச்சீட்டு: பிராம்மணன் பெயர் மேன்மையைக் குறிக்கும் ‘சர்மன்’, க்ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் ‘வர்மன்’, வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் ‘பூபதி’, சூத்திரனுக்கு பணி விடையைக் குறிக்கும் ‘தாசன்’. (திருலோக சீதாராம், 2000:14).  மநுவின் இச்சட்டம், பெயரிடுதல் என்பது மநு என்ற புறக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாயிருந்திருக்கிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது.       

நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்கட்பிரிவினர், இந்த அடையாளச்சீட்டினைச் சூட்டிக் கொள்வதற்கு உரிமை மறுக்கப்பட்து.  சாதிக்கு புறத்தேயுள்ளோர், பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர், ஹரிஜன் போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டோ அல்லது வெறுப்பிற்குள்ளாகியோ அழைக்கப்பட்டனர்.  தீண்டத்தகாதோர் என்ற பெயர் குறித்து அம்பேத்கர் கருதியது (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467): ‘தீண்டப்படாதவர்’ என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும்.  அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது.  ‘தீண்டப் படாதவர்’ என்ற பெயரிலிருந்தே தீண்டப்படாதவர் குறித்து இந்துவின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.  ‘தீண்டப்படாதவர்’ எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. இதனையொத்த கருத்தொன்று மகாத்மா காந்தியால் பரவலாக்கப்பட்ட ஹரிஜன் என்ற பெயர் மீதும் எழுப்பப்பட்டது.  பெயரில் என்ன இருக்கிறது? என்று தலைப்பிட்டு பெயர் குறிப்பிடப்படாத வாசகர் ஒருவர் மகாத்மா காந்தியிடம் எழுப்பிய கேள்வி: ஹரிஜன் பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறதென்று நான் நினைக்கிறேன்.  அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக இருக்கும்.  ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டயென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.  இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக் குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5).  

இந்திய சாதி அமைப்பில்  ஒரு தனிநபர் அல்லது சாதியின் படிநிலை, சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமை, பணி போன்றவைகளைக் கண்டறிய, ஒரு வட்டத்திற்குள் ஒருவர் அல்லது சாதி இணைத்துக் கொள்ளப்படுவதற்கும் அல்லது ஒதுக்கப்படுவதற்கும் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்து வருகிறது.  உச்சபட்ட தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் போராடிய போது, பிறரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவர்களின் சமூக முன்னேற்றத்தில் இடர்ப்பாடுகளையே ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கின்றனர். இப்பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக அந்தஸ்தில் உயர்வதற்கான சாத்தியப்பாடே இல்லை என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் 1997: 468).  மானிடவியல் அறிஞர் ராபர்ட் டெலீஜ்,  சமூக ஒழுங்கில் முன்னேற விரும்பும் ஒரு சாதி தனது இலக்குகளையும் உரிமை கொண்டாடுதலையும் பிரதிபலிக்கும் பெயரைக் கைக்கொள்வது இயல்பானது என்கிறார் (Robert Deliege, 1997:123).  பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதும், புதிய பெயரினைச் சூட்டிக்கொள்வதும் அல்லது இருக்கின்ற பெயரை மாற்றுவதும் ஒரு சமூக இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலில் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.  

தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் இல்லாதிருந்தபோதும் கூட கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள் சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர்.  தீண்டத்தகாதோர், பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைக்கெதிராய் காலனிய ஆட்சிக் காலத்தில் திரளான அம்மக்கள் ஆதி-இந்து (Nandini Gooptu, 2006), ஆதி-தம் (Ronki Ram, 2004), ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.  மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் (Gail Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246).  பெயர் மாற்றத்தில் ஈடுபட்ட முன்னவர்கள் - அவர்கள் திராவிடர்களாகவே இருந்த போதிலும், பார்ப்பனியமயமாக்கலை முன்னெடுத்தனர். ஆனால், பின்னவர்கள் அதற்கு நேரெதிரான திராவிடத்தை கைக்கொண்டனர். 

பிளவுபடுதலுக்கு இரையாக்கப்பட்ட ஆதி-திராவிடர் 

சாதி இந்துக்கள் காலனிய ஆட்சிக்குப் பின்னர், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக தங்களிடையேயுள்ள உட்சாதிப் பிரிவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களை தனித்த பெரும் சாதியாக மாற்றிக்கொள்ளும் சாதி அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அனைத்துச் சாதி இந்துக்களும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து கொள்கின்றனர்.  இவ்விணைவிற்கான வெளிப்படையான அல்லது ரகசியமான உரையாடல் எப்பொழுதுமே அவர்களிடம் இருந்து வருகிறது.  உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள்மீது காலனிய ஆட்சிக்குப் பின்னர் சாதி இந்துக்களால் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளே இதற்கு சாட்சி.  ‘ஒன்றிணைதல்’ என்பது சாதி இந்துக்களின் அரசியலாக இருந்துவரும் சூழலில் வெளிப்படையாகவே பகையுணர்வுடன் ‘பிளவுபடுதல்’ தாழ்த்தப்பட்ட மக்களின் சமகால அரசியலாக இருந்து வருகிறது.  ஆதி-திராவிடர் என்ற பெயருக்கெதிராக அருந்ததியர் மற்றும் ம(ப)ள்ளர்  இயக்கங்களின் போராட்டங்கள் பிளவுபடுதல் அரசியலில் முதன்மைப் பாத்திரம் வகித்துவருகின்றனர்.  உண்மையில், ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி சமீப காலமாகவே பிளவுபடுதல் அரசியலின் முதன்மையான இரையாகிப் போனது என்றால் அது மிகையான மதிப்பீடு அல்ல.   

பஞ்சமர், பறையர்  ஆகிய பெயர்களுக்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சியை அறிவித்திருந்த போதிலும் அது ‘’பறையர்’’ எனப்படும் சாதிக்கு மட்டுமே உரியது; அது எங்களுடையது அல்ல என்று ம(ப)ள்ளர் மற்றும் அருந்ததியர் இயக்கங்கள் போராடி வருகின்றன.  தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் ‘’அரிஜன்’’ என்ற பெயரையே மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் 1980களில் வழக்கு தொடர்ந்தது (தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம், திருச்சிராப்பள்ளி, வெளியிட்ட துண்டறிக்கை.  இது வெளியிடப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்கவில்லை).  சுயசாதி அரசியல் வலுப் பெற்றிருக்கும் இக்காலத்தில் அட்டவணைச் சாதியினரை ஆதி-திராவிடர் என்றழைக்க வேண்டுமென்ற அரசாணை (எண். 13/ஆர்டி-அநமு 1/07-1, 07 பிப்ரவரி 2007) தமிழக அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டிருப்பது போராட்டத்தை மேலும் தூண்டியிருக்கிறது.  (தினமணி 17 நவம்பர் 2007: 5; தினகரன் 19 நவம்பர் 2007: 4). ‘ஆதி-திராவிடர்’ என்னும் சொல்லாட்சி பறையரை மட்டுமே குறிப்பதற்கு பறையர்களால் முன்மொழியப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்பது அப்பெயரை எதிர்ப்பவர்களின் வாதம்.  Scheduled Caste’ என்ற ஆங்கிலச் சொல்லாட்சியை அட்டவணைச் சாதியினர் என்று மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பதிலாக ஆதி-திராவிடர் என பெயர் சூட்டியிருப்பது மாற்றப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.  எனவே, இக்கட்டுரை இனிவரும் பகுதியில் விவாதிக்க இருக்கின்ற சிக்கல்கள்: காலனிய ஆட்சியாளர்கள் பஞ்சமர், பறையர் என்ற பெயர்களை எந்த மக்கட்பிரிவினரை சுட்டுவதற்காகக் கையாண்டனர்?  சென்னை மாகாண அவையில் முன்மொழியப்பட்ட ஆதி-திராவிடர் என்னும் பெயர், பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரா? அல்லது பறையரைப்போல் ஒடுக்குமுறைக்குள்ளான அனைத்து மக்கட்பிரிவினரையும் சுட்டுவதற்காக முன்மொழியப் பட்டதா?  ஆதி-திராவிடர் என்னும் சொல்லாட்சி அடையாளப் பெயராக மட்டுமே முன்மொழியப்பட்டதா? அல்லது ஆரியர்களுக்கு (பிராமணர்) முற்பட்டோர், சாதியற்றோர் என வரலாற்றையும், கருத்தியலையும் பிரதிபலிக்கும் நோக்கத்துடனும் அப்பெயர் முன்நிறுத்தப்பட்டதா? 

பஞ்சமர், பறையர் சுட்டுவது யாரை? 

ஆதி-திராவிடர் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி பொது எண்ணமும் பிரதிபலிப்பது: பறையருக்கான  மாற்றுப்பெயரே ஆதி-திராவிடர்.  இக்கருத்தினை உறுதிசெய்வதற்கு காட்டப்பட்டுவரும் ஒரேயொரு ஆதாரமான அரசாணை எண். 817 அறிவிப்பதானது : 1. தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிட சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொற்களான ‘பஞ்சமாஅல்லது ‘’பறயா’’ அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தமிழகத்தில் ஆதி-திராவிடர் என்றும், தெலுங்கு மாவட்டங்களில் ஆதி-ஆந்திரா என்ற சொற்களும் பயன்படுத்தப்பட வேண்டும். (That this Council recommends to the Government that the terms ‘Panchama’ or ‘Paraya’ used to designate the ancient Dravidian community in Southern India should be deleted from  Government records, etc., and the term ‘Adi-dravida’ in the Tamil and ‘Adi-andhra’ in the Telegu districtse substituted instead’) 

2. அரசாங்கத்திற்கு ‘ஆதி-திராவிடர்’,‘ஆதி-ஆந்திரர்’ என்றழைப்பதில் எதிர்ப்பு இல்லை.  ஆனால், பழைய அரசு ஆவணங்களை மறுமதிப்பு செய்ய இயலாது.  பஞ்சமர், பறையர் ஆகிய சொற்களுக்குப் பதில் ஆதி-திராவிடர், ஆதி-ஆந்திரர் மற்றும் திராவிட என்ற பெயர்கள் பயன்படுத்தப்படும்.   

மேற்குறிப்பிடப்பட்ட அரசாணை, ‘தென்னிந்தியாவிலுள்ள பண்டைய திராவிடச் சமூகத்தை’ குறிப்பதற்குப் பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப் படுவதாகத்தான் கூறுகிறது; மாறாக ‘பறையர்’ என்றழைக்கப்படும் பிரிவினரையோ அல்லது ‘அவர்களை மட்டுமே’ குறிப்பதற்காகவோ அல்ல என்பது தெளிவு.  இருப்பினும்கூட அது பறையரை மட்டுமே குறிக்கப்பயன்படுத்தப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் நிர்வாகத்தேவைக்கு சாதிகளைக் கணக்கெடுத்த பொழுது நால் வருணத்திற்குள்ளே இருந்தோரை குறிப்பிட்ட பெயரில் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்திருக்கவில்லை.  இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று மநு வரையறை செய்திருப்பது இச்சிக்கலற்ற தன்மைக்குக் காரணம்.  ஆனால், நால்வருணத்திற்கு வெளியே இருந்த மக்கள் பிரிவினரைக் குறிப்பாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வந்த மக்களை என்ன பெயரில் அழைப்பது என்ற சிக்கல் காலனிய ஆட்சியாளர்களின் முன்னெழுந்தது.  அவர்கள் இம்மக்களை ‘’பறையா’’, ‘’சாதிக்கு வெளியேயுள்ளோர்’’ என்றே அழைத்தனர் (Simon Charsley,1996: 5). 1871ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்- பறையா, பள்ளன், சக்லெர் (சக்கிலியர்), தோட்டி போன்றோர் பறையாஸ் (Pariahs) என்பதின் உட்பிரிவு- என்றே ஆங்கிலேயர்கள் கருதியுள்ளனர் (Census of 1871, 1874:170).   1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் பள்ளர் மற்றும் சக்கிலியர் ‘’பறையா’’ என்றே வகைப்படுத்தப்பட்டனர்.  இது தவறு, அவர்கள் பறையரிலிருந்து வேறுபட்ட பிரிவினர் என்றும் அவர்களை தனித்தனியே வகைப்படுத்த வேண்டும் என்றும் உணர்ந்தனர் (F.A. Nicholson,1887). 1891ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பள்ளர்கள் உட்பிரிவு வாரியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றனர் (Harold A.Stuart,1891:247). ‘பஞ்சமா’ என்ற பெயர் 1893ல் பயன்படுத்தப்பட்டுள்ளது (Simon Charsley, p.5).  இது பறையர், சக்கிலியர், குறவர், வில்லியர் போன்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 152). கர்நாடகாவைச் சேர்ந்த ஹோலியர்கள் தங்களுக்குப் பஞ்சமர் என்ற பெயரினை வழங்கியதற்காக சென்னை அரசாங்கத்திற்கு நன்றி செலுத்தியிருப்பது இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் (Census of India, 1931: 342).  1901, 1911 மற்றும் 1921 கணக்கெடுப்புகளில் பறையன், பள்ளன், சக்கிலியன் என்று தனித்தனியே கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும், பறையா என்ற சொல்லை ‘பறையன்’ என்ற பிரிவினரையும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் சுட்டுவதற்குப் பயன்படுத்துவதாக 1930களிலும் அவர்கள் கூறியிருக்கின்றனர் (அரசாணை எண். 4554).  ஆதி-திராவிடா என்ற மாற்றுப்பெயர் அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட  வேண்டுமென்ற அரசாணை அமலுக்கு வந்த பின்னர் 1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆதி-திராவிடர், அருந்ததியர், சக்கிலியன், தேவேந்திரகுலத்தான், குடும்பன், மாதாரி, மாதிகா, மாலா, பள்ளன் மற்றும் பறையன் என்ற பெயர்களிலும் அம்மக்கள் பதிவு செய்யப்பட்டிக்கின்றனர் (Census of India 1931, Vol.XIV, Part.II). மேற்காட்டப்பட்ட ஆதாரங்கள் பஞ்சமர், பறையர் ஆகிய சொல்லாட்சிகளைக் காலனிய ஆட்சியாளர்கள் பறையரை மட்டுமின்றித் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான இதர மக்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. ஆகவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையருக்கு மட்டுமான மாற்றுப்பெயரல்ல.  இருப்பினும், ஆதி-திராவிடா என்ற பெயர் அமலுக்கு வந்ததற்கான சுருக்கமான போராட்ட வரலாற்றுடனும், அப்பெயரை மையப்படுத்தி நடைபெற்ற விவாதத்தின் ஊடாகவும் அப்பெயர் பறையருக்கு மட்டுமானதா என்பதைக் காண்பது இங்கு அவசியமாயிருக்கிறது. 

ஆதி-திராவிடர்: 30 ஆண்டுப் போராட்டம் 

பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியிருக்கிறது.  பி.வி. சுப்ரமண்யம் பிள்ளை, வி. முகுந்து பிள்ளை, முனுசாமி பிள்ளை, ராஜரத்னம் பிள்ளை, சண்முகம் பிள்ளை, ஒங்காரம், முத்துகிருஷ்ண பிள்ளை, திருப்புகழ் அம்மாள், வேணுகோபால் பிள்ளை, வாசுதேவ பிள்ளை மற்றும் எம்.சி. ராஜா ஆகியோர் மாண்றேகு செம்ஸ்ஃபோர்டை சந்தித்து பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்தனர்.  ஜனவரி 1922 ஆண்டில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.  சென்னை மாகாண அவை உறுப்பினர் வீரையன் கோயம்புத்தூரில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். மாநாடுகளும் கூட்டங்களும், தஞ்சாவூர், மலபார், திண்டுக்கல், செங்கற்கட்டு, வட மற்றும் தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, பங்களூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டிருப்பது ஆதி-திராவிடா பெயருக்கான போராட்டம் அன்றைய சென்னை மாகாணத்தையும் கடந்து நடந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  இதற்கென பல அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டன. சுமார் 30 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் இறுதியாக, அரசாணை 817க்கான தீர்மானம் சென்னை மாகாண அவையில் எம்.சி.ராஜா 20 ஜனவரி 1922 அன்று முன்மொழிந்தார் (MLCD, 20 ஜனவரி 1922: 2047). உண்மையில், ஆதி-திராவிடர் சொல்லாட்சிக்கான போராட்டத்தில் பறையர் என்றழைக்கப்படும் மக்கள் அதிகம் பங்கேற்றிருக்கலாம்.  அவ்வாறென்றால் பறையருக்கு மட்டுமானது தானே ‘ஆதி-திராவிடர்’ என்று வாதிடலாம். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளப் படுவதை குறுக்கிடும் கேள்வி: ஆதி-திராவிடர் என்ற பெயரினை பறையர்கள் தங்களுக்கு மட்டுமே உரியதென உரிமை கோரினரா?  இச்சிக்கலுக்கான தீர்வுக்கு, சென்னை மாகாண அவையில் ஆதி-திராவிடர் பெயர் மாற்றத்தை முன்வைத்தவர்களின் விவாதத்தைக் காண வேண்டும்.   

ஆதி-திராவிடர்: சாதியற்றோரின் குறியீடு

பெயர் மாற்றத்திற்காக எம்.சி.ராஜா முன்வைத்தக் காரணங்கள்:  நாங்கள் நீண்டகாலமாக பறயாஸ் என்று அழைக்கப் படுகிறோம்.  இப்பெயரின் தோற்றம் என்னவாக இருந்தபோதிலும் இது- மகிழ்ச்சியற்ற, புனிதத்திற்கும் மரியாதைக்கும் எதிரானவற்றையே- வெளிப்படுத்துகிறது.  சுயமரியாதைக்கான எண்ணம் எழுந்த போது நாங்கள் இப்பெயரினை எதிர்த்து ஒரு நல்ல பெயருக்காகப் போராடினோம்.  எங்கள் மீது அக்கறை கொண்ட சில இந்துக்கள் பஞ்சமர் என்ற பெயரினைப் பரிந்துரைத்தபோது பறையருக்குப் பதிலாக அதனை ஏற்றுக்கொண்டோம்.  எங்கள் சுயமரியாதை அதிகரித்தபோது, பஞ்சமர் என்ற பெயரின் ஆபத்தையும் உணர்ந்தோம்.  சாதியை நிராகரிக்கும்- எங்களின் இனத்தையும் தோற்றத்தையும் புவியியல் நிலையையும் தெரிவிக்கும்- ஒரு பெயரே எங்களுக்கு வேண்டும்.  இம்மண்ணின் உண்மையான மைந்தர்கள் நாங்களே. எங்களை நாங்கள் ஒருபோதும் சாதியோடு இணைத்துக்கொண்டதில்லை.  எங்களின் சங்கத்தை சிலர் பறய மகாஜன சபா என்று அழைக்க நினைத்தபோது ‘ஆதி-திராவிட சபா’ என்று அழைக்கவே நாங்கள் தீர்மானித்தோம். ஆதி-திராவிடர்கள் (Adi-Dravidas) அல்லது உண்மையான திராவிடர்கள் (Original Dravidas) என்று அரசாங்கத்தின் அனைத்து ஆவணங்களிலும் பதிவுசெய்து எங்களுடைய சமூகம் மரியாதை பெறுவதற்கு உதவும்; இது எங்களைத் திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாக நிறுத்தும் (மேலது, 2048, 2051).    

எம்.சி.ராஜாவின் உரை, ஆதி-திராவிடர் என்ற பெயர் பறையர்களைச் சுட்டுவதற்கு முன்மொழியப்பட்டதாகவே கொள்வோம்.  சாதியை புறக்கணிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்தியிருந்த அவர்கள் ஆதி-திராவிடர் என்ற பெயரைப் பறையர்களுக்கு மட்டுமென்றே சுருக்கிக்கொண்டார்களா? அல்லது தங்களையொத்த ஒடுக்குமுறையை அனுபவித்து வந்த இதர சாதியினருக்கும் விரித்துக் கொண்டனரா?  இவ்விடத்தில் பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் பங்கேற்ற எஸ்.சோமசுந்தரம் பிள்ளை முன்வைத்த கருத்துக்கள்  கவனிக்கத்தக்கவை:  ஆதி-திராவிடர் என்ற சொல் தென்னிந்தியாவின் பண்டைய மக்கள் என்ற பொருளைத் தருகிறது.  ‘பறையர்’ என்ற வார்த்தை மரியாதைக்குரிய பொருளைப் பெற்றிருந்தது. ‘பறையர்’ என்பதின் பொருள் அரசனின் ஆணைக்கிணங்க போர் அறிவிப்பு செய்பவன்.  எதிரிகளால் எங்கள் நாடு பிடிக்கப்பட்டபோது நாங்கள் வறுமைக்குள்ளானோம்; பெயரும் திரிபுக்குள்ளாகி மதிப்பற்றதாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஆதி-திராவிட மக்கள் பறையர் என்ற பெயர் நீக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.  ஆனால், ஆதி-ஆந்திரர் என்ன பொருளைத் தருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  சிலர் ஆதி-மலையாளி, ஆதி-கர்நாடகா என்று அழைக்கப் படுவதை விரும்பலாம்.  இவையனைத்தும் திராவிட மொழிகளே (மேலது, பக். 2050). ஆதி-திராவிடர் என்ற அழைக்கிறபொழுது அது தெலுங்கு, மலையாளி, கர்நாடகம் மற்றும் தமிழ் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.  சோமசுந்தரம் பிள்ளையின் உரை இரண்டு முரணற்ற பொருளைத் தருகிறது: 1.பறையர் ஆதி-திராவிடர் என்றழைக்கப்பட வேண்டும். 2. ஆதி-திராவிடரென்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மக்களையும் குறிக்கும்.  இவ்விருவர்களின் உரையும் தரும் தீர்க்கமான பதில்: ஆதி-திராவிடா என்ற பெயர் பிறரால் சூட்டப்படாமல் அம்மக்களாகவே தாங்கள்தான் பண்டைய திராவிடர்கள் என்ற வரலாற்று உணர்வுநிலையோடு தெரிவு செய்து கொண்ட பெயர்.  பறயாவுக்கு அல்லது பறையர்களுக்கு என்று மட்டுமல்லாமல் தங்களைப்போல் ஒடுக்கு முறைக்குள்ளாகும் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, மலையாளம் மற்றும் கர்நாடகம் பேசும் மக்களுக்கும் அப்பெயர் வேண்டும் என்பதுதான்.  எனவே, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையர்களுக்கும் மட்டுமல்ல என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.   

இம்முடிவு உதாசீனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பெயரினை எதிர்ப்பவர்கள் தங்களுடைய சாதிப்பெயர் அந்த அரசாணையில் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை என்று வாதிடலாம்.  எனவே, ஆதி-திராவிடர் பறையருக்கு மட்டுமல்ல என்ற வாதத்தை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரத்தை முன்வைப்போம். ஆர்.வீரையன், சென்னை மாகாண அவை செயலாளருக்கு 29 ஆகஸ்டு 1924 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பறையர், பள்ளர், சக்கிலியர் மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் பொது ஆவணங்களில் இடம் பெறக் கூடாது; அவற்றிற்குப் பதிலாக ஆதி-திராவிடா மற்றும் ஆதி-ஆந்திரா ஆகிய பெயர்கள் தான் இடம்  பெற வேண்டும் என்பது குறித்துத் தீர்மானம் வரும் சென்னை மாகாண அவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.  இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப் பட்டு ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட எண். 817 சட்டம் (பொது) 25 மார்ச் 1922 என்ற அரசு ஆணையோடு இணைத்து அமல்படுத்தப்பட்டது (அரசாணை எண்.3571).  இவ்வாணை, ஆதி-திராவிடா என்ற பெயர் பறையருக்கு மட்டுமல்லாது பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற சாதிகளுக்கும் உரியது என்பதை உறுதி செய்கிறது.  கேரளாவில் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான செருமர்கள் (புலையர்) உட்பட இதர மக்கள் தங்களை ஆதி-திராவிடர் என்று அழைக்கத் தொடங்கினர் என்பதும் இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும் (Census of India 1931;p.335).  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு, குறிப்பாக அப்பெயரை பல போராட்டங்களுக்கிடையே அமலுக்கு கொண்டுவந்த பறையர்களுக்கு மட்டுமின்றி, உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களுக்கும் விரித்துக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.   

இச்செயல் ஆதி-திராவிடர், ‘பெயர்’ என்ற தன்மையைக் கடந்து ஒதுக்குமுறைக்குள்ளான மக்களைத் தென்னிந்தியாவின் பண்டைய குடிகள் என்ற வரலாற்றினை உரிமை கொண்டாடியுள்ளது.  திராவிட மொழிக்குடும்பம் என்ற அடையாளத்துக்குள் திரளுவதற்கு முயற்சித்திருக்கிறது.  சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சாதியற்றோராக விரிந்திருப்பதானது ஆதி-திராவிடர் கருத்தியல் தளத்திற்குள்ளும் சென்றிருக்கிறது என்பது தெளிவு.  எனவே, ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல, அது பறையர்களால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும்கூட.  இதனை வேறு வார்த்தையிலும் கூறலாம்: ஆதி-திராவிடா என்ற சொல்லாட்சி தங்களுக்கு மட்டுமானது என்று ஒருபோதும் பறையர்கள் உரிமை கொண்டாட இயலாத அதே சமயத்தில், பிறரும் அதனை பறையர்களுக்கு மட்டுமேயானது என வாதிடவும் இயலாது.  காரணம், சமத்துவத்திற்கான ஒரு கருத்தியல் ஒருபோதும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியதாக இருக்கமுடியாது, அக்கருத்தியல் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும்கூட.    

பறையர், பள்ளர், சக்கிலியர்: இழிபெயர்களுக்கெதிரான போராட்டம்  

தங்களால் இழிபெயர்கள் எனக் கருதப்பட்டவற்றை யார் பயன்படுத்தினாலும் அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.  பறையர் என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்களை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது (Aloysius, 1998: 166).   கட்டுரையில் மேற்குறிப்பிட்ட அரசாணை அமலுக்கு வந்த பின்னர், அரசு ஆவணங்களில் பறையர், பள்ளர், சக்கிலியர், மாதிகா மற்றும் தொம்பா போன்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பதை எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் குரலெழுப்பப்பட்டிருக்கிறது.  சில எடுத்துக்காட்டுக்கள்:

1. நீதிமன்ற அழைப்புக் கட்டளை மற்றும் நீதிமன்ற விசாரணையின்போது பறையன் என்ற பெயர் குறிப்பிடப் படுவதை சென்னை மாகாண அவையில் எதிர்த்தார் வீரையன்.   அவ்வாறு குறிப்பிடுவது தவறென்ற சட்ட உறுப்பினர் (சென்னை மாகாண அவையில் Law Member பதவியில் இருந்தவரை சட்ட உறுப்பினர் என இங்குக் குறிப்பிடப்படுகிறது) அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் (MLCD,Vol.XXIV1925:767-768). 

2. மேட்டுப்பாளையம் ஒன்றிய வாரியம் நாகன் என்பவருக்கு கொடுத்த அறிக்கையொன்றில் ‘சக்கிலியன்’ என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய வீரையன், அச்செயலை எதிர்த்தார்.  இத்தகைய பெயர் பயன்படுத்தக்கூடாது என்று அரசாணை இருந்தபோதும் இன்றும் அப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது; அரசாங்கம் அவ்வாணை அமல்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்குமா என்ற வினவினார்.  உள்ளாட்சித்துறை அமைச்சர் பனகல் அரசர், ‘இதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.  அரசாங்கம் அத்தகைய பெயர்களைப் பயன்படுத்தாது என்று மட்டுமே கூறியது.  பிறர் அப்பெயர்களை பயன்படுத்தினால் சம்பந்தபட்டவர்களே நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். ஆர்.வீரையன், ‘உள்ளாட்சி அமைப்பு அச்சிட்ட அறிக்கையில்தான் இவ்வாறு உள்ளது; தனிநபர்கள் அதைப் பயன்படுத்தவில்லை’ என்றார்.  பனகல் அரசர், ‘உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணங்கள் அரசாங்க ஆவணங்கள் அல்ல’ என்றார்.  ‘உள்ளாட்சி அமைப்புகள் அரசாங்கத்தின் ஒரு அங்கம் இல்லையா’ என்ற கேள்வியை எழுப்பினார் ஆர்.வீரையன்.  இறுதியில், குறிப்பிட்ட சம்பவத்தை கூறினால், ‘அது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார் பனகல் அரசர்.  வீரையன் மீண்டும் மேட்டுப்பாளையம் சம்பவத்தை குறிப்பிட்டுக் கூறினார் (MLCD, Vol. XXIX, 1926: 590-591) 

3. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பறையர் பள்ளர் சக்கிலியர் பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட உறுப்பினர் பதிலளிக்குமாறு வீரையன் கோரினார்.  குறிப்பிட்ட சம்பவங்களைக் கவனத்திற்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட உறுப்பினர் தெரிவித்தார்  (MLCD, Vol.XXX, 1926:248).  வீரையன் சென்னை மாகாண அவைக்குள் பறையன், பள்ளன், சக்கிலியன் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் போதுமானது.  இதிலிருந்து அறிந்துகொள்ள வேண்டியது: தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களின் பிரதிநிதிகளாகச் சென்னை மாகாண அவை உறுப்பினர்களானோர் பறையர், பள்ளர், சக்கிலியர் என்று பிளவுபடுத்தாமல் அனைவரையும் ஆதி-திராவிடர்களாகவே கருதினர் என்பது தெளிவு.  

ஆதி-திராவிடர்: சாதிக்கெதிரான சமத்துவக் கருத்தியல் 

கட்டுரையில் காட்டப்பட்டிருக்கின்ற மேற்கோள்கள் பஞ்சமர், பறையர் ஆகியவற்றிற்கு மாற்றாக ஆதி-திராவிடர் என்ற பெயர், பறையர்களின் போராட்டத்தினால் விளைந்திருப்பினும்கூட, அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி தீண்டாமை ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் பெயராக மட்டுமின்றி அது -சாதியைப் புறக்கணிப்பவர்கள், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்துபவர்களின்- பெயராக இருந்திருக்கிறது. மேலும், அப்பெயர் திராவிடர்களின் ஒற்றுமைக்கானதாகவும் ஆரியர்களுக்கு (பார்ப்பனர்கள்) எதிரானதாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ‘ஜாதிபேதத்துக்கும் ஜாதிக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்களும், எக்காலத்துக்கும் யதார்த்தமும் உறுதியும், தருமசிந்தனையும் குடிகொண்டவர்களாகிய நம்மவர்கள்’ என்ற பறையர்களின் பகிரங்க அறிவிப்பு, ஆதி-திராவிடர் சொல்லாட்சியின் அரசியலுக்கு சாட்சி (திராவிட மகாஜன சங்கம் மற்றும் மெட்ராஸ் பறையா மகாஜன சங்கம் 1916 ஆண்டில் வெளியிட்ட துண்டறிக்கை).   ஆதி-திராவிடாவின் இலக்கு, திராவிடர்களான பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இணையாகத் தாங்கள் வரவேண்டும் என்பதே, மாறாக இந்துமயமாக்கல் (பார்ப்பனீயம்) அல்ல.  இந்த லட்சியத்திற்கு பறையர், பள்ளர், சக்கிலியர் போன்ற மக்களை ஒரு குடையின் ஒருங்கிணைக்கும் முயற்சியே ஆதி-திராவிடர் என்ற கருத்தியல்.  இக்கருத்தியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் பறையர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வர்க்கம் அப்பெயரை தங்களுக்கு மட்டுமே உரியது என்று உரிமை பாராட்டாதிருந்த போதிலும் கூட, அது பறையர் சாதிக்கான மாற்றுப்பெயர் என்ற பார்வை தவறெனக் கட்டுரையில் மெய்ப்பிக்கட்டிருக்கிறது.  

சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமான கருத்தியலின் உருவாக்கத்தில் அல்லது அக்கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை நிறுவுவதற்காகப் போராடும் ஒரு இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பங்கேற்கின்ற பொழுது, அம்மக்கட் பிரிவினர் அல்லாத பிறர் அக்கருத்தியலை அல்லது அவ்வியக்கத்தை அதில் பங்கேற்றிருக்கின்ற சாதிக்கு அல்லது சாதிகளுக்கு மட்டுமேயானது என்று பார்ப்பதும் அதனை பரப்புவதுமான செயலில் இறங்குவது இந்திய சமூக அமைப்பில் புதிதானதொன்று அல்ல.  இடதுசாரிகள் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடிய போது அவ்வியக்கத்தில் கூலித்தொழிலாளிகளாகவும் பண்ணையடிமைகளாகவுமிருந்த பறையர், பள்ளர் அதிகமாக இருந்ததால் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்றே பிறரால் அடையாளப்படுத்தப்பட்டதனை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும் (Saraswathi Menon, 1979:408). ஆதி-திராவிடர் என்ற கருத்தியலைப் பறையர்களுக்கான பெயர் என்று இன்று அடையாளப்படுத்தப்படுவதற்கும் இடதுசாரி இயக்கம் ‘பறையன் கட்சி’, ‘பள்ளன் கட்சி’ என்று அன்று அடையாளப்படுத்தப்பட்டதற்கும் இடையில் காலம் மட்டும் வேறுபாடே தவிர, பார்வை ஒன்றுதான்.  இந்நிலையை இவ்வாறு கூறலாம்: தமிழக/ இந்திய சாதிய சமூக அமைப்பில் அதனை புறக்கணித்துவிட்டு, சமத்துவத்தை வலியுறுத்தும் முற்போக்கு கருத்தியலை அல்லது இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே என்று அடையாளப்படுத்துவதன் மூலமும் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பு தொடர்ச்சியாய் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.    

 (கட்டுரையை வாசித்து ஆலோசனை வழங்கிய  பேராசிரியர்கள் ஆ.தனஞ்செயன், சி.லக்ஷ்மணன், ஆய்வு மாணவர் ராமஜெயம் ஆகியோருக்கு நன்றி)     

 1. முதன்மைச் சான்று

 GO. 817, Law (General), 25 March 1922.

GO. 3571, Law (General), 16 December 1924.

GO. 4554, Law (General), 28 October 1930.

GO. 1802, Law (General), 20 April 1931

GO. 1458, Law (General), 11 April 1932. 

MLCD, 20 January 1922

MLCD, Vol. XXIV 1925.

MLCD, Vol. XXIX, 1926.

MLCD, Vol. XXX, 1926.

MLCD, 05 August 1932. 

Census of the Madras Presidency 1871 Vol.1(Madras: 1874)

Census of India 1931 Vol. XIV, Part. I

Census of India 1931, Vol. XIV, Part. II

யாதவமித்ரன் (மே-ஜூன், 1930).

தமிழ் ஹரிஜன் தொகுதி 14 (ஏப்ரல்: 1946). 

தினமணி, 17 நவம்பர் 2007.

தினகரன், 19 நவம்பர் 2007.  

2. இரண்டாம் நிலைச் சான்று

Aloysius, G. Religion as Emancipatory Identity: A Buddhist Movement Among the Tamils Under Colonialism (New Delhi: New Age, 1998). 

Bayly, Susan. Caste, Society and Politics in India (Cambridge: Cambridge University Press, 2000). 

Charsley, Simon. “Untouchable”: What is in a Name?’, The Journal of the Royal Anthropological Institute, Vol. 2, No. 1 (March: 1996). 

Deliege, Robert.  The World of Untouchables: Paraiyars of Tamil Nadu (Delhi: Oxford University Press, 1997). 

Gooptu, Nandini. Swami Acchutanand and the Adi Hindu Movement (New Delhi, Critical quest, 2006). 

Menon, Saraswathi. ‘Historical Development of Thanjavur Kisan Movement: Interplay of Class and Caste Factors’, EPW,  Vol. XIV, Nos. 7 and 8 (1979). 

Nicholson, F.A. Manual of the Coimbatore district in the Presidency of Madras (Madras: Government Press, 1887). 

Omvedt, Gail. ‘The Anti-Caste Movement and the Discourse of Power’, Race and Class, Vol. 33, No. 2 (1991).

 Ram, Ronk. ‘Untouchability, Dalit Consciousness, and the Ad Dharm Movement in Punjab’, Contributions to Indian Sociology, Vol. 38, No. 3 (2004).

 Stuart, Harold A. Census of India 1891 Vol. XIII.

டாக்டர் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் தொகுதி 10 (புது தில்லி: டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், 1997). 

சீதாராம், திருலோக, மனுதர்ம சாஸ்திரம் (சென்னை: அலைகள், 2000).

 

-       புதுவிசை, இதழ் 19, ஜன-மார்ச் 2008